கள்ளக்குறிச்சி பெரிய ஏரி நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி
கள்ளக்குறிச்சி பெரியஏரிநிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வந்தது. இதனால் கல்வராயன்மலையில் இருந்து உற்பத்தியாகி வரும் பொட்டியம், கல்படைஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் கோமுகி அணையின் நீர்மட்டம் 44 அடிக்கு மேல் உயர்ந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நேற்று அணைக்கு நீர் வரத்து பாதியாக குறைந்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் கோமுகி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோமுகி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையிலிருந்து கள்ளக்குறிச்சி பெரிய ஏரி, ஏமப்பேர் ஏரி மற்றும் நீலமங்கலம், தென்கீரனூர் ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் கள்ளக்குறிச்சி பெரிய ஏரி நிரம்பியது.
பெரிய ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறுவதற்கு கட்டப்பட்ட தடுப்புகளில் இருந்து அருவிபோல் தண்ணீர் சென்றது. இந்த உபரி தண்ணீரானது மீண்டும் கோமுகி ஆற்றிலேயே கலந்து செல்கிறது. கடந்த ஆண்டில் ஏரி நிரம்பாததால் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. ஆனால் இந்த வருடம் ஏரி நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story