கோவையில் பட்டப்பகலில் சம்பவம்: சாலை தடுப்பை உடைத்து கடந்து சென்ற காட்டு யானைகள்


கோவையில் பட்டப்பகலில் சம்பவம்: சாலை தடுப்பை உடைத்து கடந்து சென்ற காட்டு யானைகள்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:00 PM GMT (Updated: 3 Dec 2019 7:54 PM GMT)

கோவையில் பட்டப்பகலில் சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு கடந்து சென்ற காட்டு யானைகளை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இடிகரை,

கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பாலமலை, பண்ணாரி அம்மன் கோவில் மலைப்பகுதி, பொன்னூத்து அம்மன் மலைப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவை தேடி மலையடிவாரப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கு வந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்வகைகளை தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் யானைகள் தொடர்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் பண்ணாரி அம்மன் கோவில் மலைப்பகுதியில் இருந்து இறங்கிய 6 காட்டு யானைகள் நரசிம்மநாயக்கன்பாளையம் தெக்குப்பாளையம் வழியாக கவுசிகா நதிப்பள்ளம் அருகே கோவை- மேட்டுப்பாளையம் சாலையை கடந்து இடிகரை கிராமத்திற்கு சென்றது.

இந்த தகவல் கிடைத்ததும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானைகள் அந்த பகுதியிலேயே சுற்றி வந்தன. இந்த நிலையில் நேற்று காலை 7 மணியளவில் அந்த யானைகள் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் போன்று, தெக்குப்பாளையம் பகுதியில் உள்ள கோவை- மேட்டுப்பாளையம் சாலையை நோக்கி வந்தன.

அப்போது கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், ஊட்டியில் இருந்து கோவைக்கும் கார், பஸ்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் கூட்டமாக சாலையோரம் வந்து கொண்டிருந்த யானைகளை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நடுரோட்டில் வாகனங்கள் நிறுத்தினர்.

இதற்கிடையில் அந்த யானைகள் சாலைக்கு வந்தன. ஆனால் சாலையின் குறுக்கே தடுப்பு கம்பிகள் இருந்ததால் அதனை தாண்டி செல்வது எப்படி என்று யோசித்தன. ஆனால் கூட்டத்தில் முன்னால் வந்து கொண்டிருந்த ஆண்யானை எதைப்பற்றியும் யோசிக்காமல் சாலை தடுப்பு கம்பிகளை துதிக்கையால் உடைத்துக்கொண்டு கடந்து சென்றது. இதனை பார்த்த பின்னால் வந்த மற்ற யானைகளும் அதன் பின்னே கடந்து சென்றன. பட்டப்பகலில் காட்டுக்குள் நடப்பது போன்று நடு ரோட்டில் யானைகள் அட்டகாசம் செய்யும் காட்சி, வேடிக்கை பார்த்த வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் கவர்ந்தது. பீதியுடன் அதனை அவர்கள் ரசித்தனர். சிலர் அரிதான அந்த காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்த வனத்துறையினர் 2 ஜீப்களில் அங்கு விரைந்து வந்தனர். பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்டினர். இதனை தொடர்ந்து அந்த யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் செல்லத்தொடங்கின. தொடர்ந்து அவற்றை அந்த பகுதியில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். தொடர்ந்து யானைகள் திரும்பி வராமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானைகள் சாலையை கடக்கும்போது, சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்லமுடியாமல் நின்றதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் கோவை-மேட்டுப்பாளையம் சாலையை காட்டுயானைகள் ஹாயாக கடந்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Next Story