மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை, சீர்காழியில் கடைகள் அடைப்பு


மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை, சீர்காழியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 4:30 AM IST (Updated: 4 Dec 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறை, சீர்காழியில் கடைகள் அடைக்கப்பட்டன.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பட்டமங்கலத்தெரு, காந்திஜி சாலை, கச்சேரி ரோடு, பெரிய கடைத்தெரு, நாராயணப்பிள்ளை தெரு, டவுன் விரிவாக்க பகுதி, பெரியகன்னாரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டீ கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. இந்த கடையடைப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சீர்காழி

சீர்காழியில், வர்த்தக சங்கம், வர்த்தக நல சங்கம், புதிய பஸ் நிலைய வர்த்தக சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி சீர்காழி பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள், கடைவீதி, ரெயில்வே சாலை, தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

இந்த கடையடைப்பால் சீர்காழியில் உள்ள முக்கிய கடைவீதிகள், பஸ் நிலையங்களில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. மேலும், மருத்துவ கல்லூரி அமைக்க வலியுறுத்தி சீர்காழி தாசில்தார் சாந்தியிடம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகவீரபாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் சுப்பராயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன், காங்கிரஸ் கட்சி நிர்வாகி குமார், பா.ம.க. நகர செயலாளர் சின்னையன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.


Next Story