வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்: சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் அவதி - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2019 10:30 PM GMT (Updated: 3 Dec 2019 8:07 PM GMT)

ஆவடி பகுதியில் சாலையில் அடிக்கடி சுற்றித்திரியும் மாடுகளால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பொதுமக்கள் அவதி அடைந்து வருவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஆவடி,

சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், மற்றும் திருநின்றவூர்-பெரியபாளையம் சாலை, ஆவடி புதிய ராணுவ சாலை, ஆவடி-பூந்தமல்லி ஆகிய சாலைகளின் வழியாக தினந்தோறும் பஸ், லாரி, கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப் படும் மாடுகள் சாலைகளில் பல இடங்களில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பதும் சாலையின் நடுவே படுப்பதுமாக இருந்து விடுகின்றன. இதனால் காலை மற்றும் மாலையில் மாணவர்கள் பள்ளி-கல்லூரி, செல்லும் போதும், பொதுமக்கள் அலுவகங்கள் செல்லும் நேரங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையின் குறுக்கே செல்லும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகளோ, திருநின்றவூர் பேரூராட்சி அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கால்நடைகளை வைத்திருப்போர் சாலைகளில் கால்நடைகளை விட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும், அதை மீறும் பட்சத்தில் கால்நடைகளை கோசாலைக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

அவ்வாறு அழைத்து செல்லப்படும் கால்நடைகளை உரிமையாளர்கள் 7 நாட்களில் கோசாலையில் இருந்து கூட்டி செல்ல வில்லையென்றால் அந்த கால்நடைகள் ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கவும் எச்சரித்தார்.

எனவே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story