மேட்டுப்பாளையம் சம்பவத்துக்கு கண்டனம்: கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 33 பேர் கைது


மேட்டுப்பாளையம் சம்பவத்துக்கு கண்டனம்: கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 33 பேர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2019 4:30 AM IST (Updated: 4 Dec 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம் சம்பவத்தை கண்டித்து கோவில்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி, 

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீடுகள் இடிந்து 17 பேர் உயிர் இழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதிஉதவி வழங்க கோரியும் நேற்று காலையில் கோவில்பட்டியில் எட்டயபுரம்-பசுவந்தனை சாலை சந்திப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். செய்தி தொடர்பாளர் மனுவேல்ராஜ், மாநில வக்கீல் அணி துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்களின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் செண்பகராஜ், மாவட்ட நிதி செயலாளர் ஊர்க்காவலன், ஒன்றிய செயலாளர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 33 பேரையும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Next Story