அம்பை அருகே, போலி சுகாதார ஆய்வாளர் கைது - கடைகளில் வசூல் வேட்டை நடத்தியபோது சிக்கினார்


அம்பை அருகே, போலி சுகாதார ஆய்வாளர் கைது - கடைகளில் வசூல் வேட்டை நடத்தியபோது சிக்கினார்
x
தினத்தந்தி 4 Dec 2019 4:00 AM IST (Updated: 4 Dec 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

அம்பை அருகே, பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்துவதாக கூறி, கடைக்காரர்களிடம் வசூல் வேட்டை நடத்திய போலி சுகாதார ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை,

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் நேற்று காலையில் டிப்-டாப் உடையணிந்த ஆசாமி ஒருவர் கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

தன்னை சுகாதார ஆய்வாளர் என்றும், இங்குள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில் சோதனைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து கடைகளுக்குள் சென்று சோதனை நடத்தினார். அப்போது கடைக்காரர்களை மிரட்டி குறிப்பிட்ட தொகையையும் அவர் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று கல்லிடைக்குறிச்சி செட்டிபிள்ளைமார் தெருவில் உள்ள அமீர் என்பவரின் பலசரக்கு கடைக்கும் அவர் சென்றார். அப்போது அவர் கடைக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தினார். அவர் மீது சந்தேகம் அடைந்த அமீர், கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அமீர் கடைக்குள் இருந்த டிப்-டாப் ஆசாமியை வெளியே அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அம்பை அருகில் உள்ள பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த வேலு மகன் சங்கர் என்ற யாசிம்கான் (வயது31) என்பதும், போலியாக சுகாதார ஆய்வாளர் என்று கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story