நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரம் நட எடுத்த நடவடிக்கை என்ன? மதுரை ஐகோர்ட்டு கேள்வி
நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரங்கள் நடுவதற்கு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பிய மதுரை ஐகோர்ட்டு, இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த வக்கீல் எம்.திருநாவுக்கரசு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
மன்னர் ஆட்சி காலத்திலும், அதற்கு பிறகும் சாலை ஓரங்களில் இருபுறமும் மரங்கள் நட்டு பராமரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த மரங்கள் நீண்ட தூரம் பயணம் செய்வோர் ஓய்வு எடுக்கவும், வெயில்-மழைக்கு ஒதுங்கவும் பயனாக இருந்தது.
சாலையோர மரங்கள் வெயிலில் இருந்து மக்களை காப்பாற்றுவது மட்டும் இல்லாமல் இயற்கை பாதுகாப்புக்கும் பயன்பட்டது.
வாகன பெருக்கம் காரணமாக சாலைகள் 4 மற்றும் 6 வழிச்சாலையாக மாற்றப்படுவதால் சாலையோர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்காக சாலை இணைப்பு மற்றும் விரிவாக்கப்பணி மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தாலும், வளர்ச்சிப்பணி என்ற பெயரில் மரங்களை அகற்றுவதை ஏற்க முடியாது.
சாலையோர மரங்கள் அகற்றப்படுவதால் பருவகாலம் மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய அளவில் மாறுதல் ஏற்படுகிறது.
இந்தநிலையில் சாலை விரிவாக்கத்தின்போது மரங்களை பாதுகாக்க மத்திய போக்குவரத்துறை பசுமை வழிச்சாலை (மரங்கள் நடுவது, அழகுபடுத்துதல், பராமரித்தல்) கொள்கையை 2015-ம் ஆண்டில் வகுத்தது.
இதையடுத்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 50 ஆயிரம் மரங்கள் நடப்படும் என நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. அதன்படி மரங்கள் நடப்படவில்லை. சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டும் போது ஒரு மரத்துக்கு பதில் 10 மரங்களை நட வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் மரங்கள் நடப்படவில்லை. சில இடங்களில் பெயரளவில் மரங்களை நட்டுள்ளார்கள். எனவே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு, பராமரிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் திருநாவுக்கரசு ஆஜராகி, “தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்த பதில் மனுவில், மதுரை-கன்னியாகுமரி (என்.எச்.-7) இடையேயான நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மரங்களை நட்டு பராமரிக்க சுமார் ரூ.8 கோடி மதிப்பில் திட்டம் தயார் செய்யப்பட்டு, 5 ஆண்டுகளில் இந்த பணிகள் முடிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் அது எந்த வகையில் முடிக்கப்படும் என்று தெரியவில்லை. என்னுடைய மனுவில் தமிழகம் முழுவதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். ஆனால் அது குறித்து எந்த பதிலும் இல்லை” என்றார்.
முடிவில், நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து மாநில, மத்திய அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை வருகிற ஜனவரி மாதம் 6-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story