இலவச அரிசி அல்லது பணம் வழங்கக்கோரி நாராயணசாமி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா


இலவச அரிசி அல்லது பணம் வழங்கக்கோரி நாராயணசாமி அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 10:27 PM GMT)

இலவச அரிசி அல்லது பணம் வழங்கக்கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை அரசு சார்பில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிவப்பு நிற கார்டுதாரர்களுக்கு தலா 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற கார்டுதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது.

சில நேரங்களில் அரிசிக்கு பதிலாக பணமானது அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக இலவச அரிசியோ பணமோ வழங்கப்படவில்லை.

அலுவலகம் முன்பு...

இதனை உடனடியாக வழங்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில் புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் நேற்று பகல் 11.45 மணி அளவில் சட்டசபைக்கு வந்தனர்.

முதல்-அமைச்சர் அலுவலகம் முன்பு அமர்ந்த அவர்கள் இலவச அரிசி அல்லது பணம் வழங்கக்கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் பேச்சுவார்த்தை

அந்த நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான டி.பி.ஆர்.செல்வமும் அங்கு வந்தார். அவரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தற்போது சிவப்பு நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு 6 மாத இலவச அரிசிக்கு பதிலாக ரூ.3 ஆயிரத்து 600-ம், மஞ்சள் நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1,800-ம் வழங்க கோப்பு தயாராக உள்ளதாகவும், ஒரு வாரத்துக்குள் அரிசிக்கான பணம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறினார்.

23 மாதத்துக்கான

ஆனால் அதை எம்.எல்.ஏ.க்கள் ஏற்கவில்லை. இலவச அரிசி வழங்கப்படாமல் உள்ள 23 மாதத்துக்கான பணத்தை வழங்கவேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.வை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.

நாராயணசாமி உறுதி

அப்போது, முதலில் 6 மாதத்துக்கான பணம் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்றும் பாக்கி உள்ள மாதங்களுக்கு படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் 12.45 மணிக்கு தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் போராட்டத்தால் சட்டசபை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story