மாவட்டத்தில் நெற்பயிர்களை 15 –ந் தேதி வரை காப்பீடு செய்யலாம் - கலெக்டர் மெகராஜ் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் நெற்பயிர்களை வருகிற 15–ந் தேதி வரை காப்பீடு செய்யலாம் என கலெக்டர் மெகராஜ் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நாமக்கல்,
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தில் இருந்து நெற்பயிர்களை பாதுகாத்திட தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரினை வடித்திட விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும்.
இளம் பயிர்கள் அதிக நாட்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் ஜிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு, இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும்பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும்.
நெற்பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப்புழு, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், இலை உரை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை கண்டறிந்து தக்க பூச்சிநோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருப்பின் இருப்பில் உள்ள நாற்றுக்களை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட வேண்டும்.
இதுதவிர இயற்கை இடர்பாடுகளினால் பயிர் சேதத்தினை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திடடத்தில் பயிர் காப்பீடு செய்திடலாம். நாமக்கல் மாவட்டத்தில் சம்பா நெற்பயிரில் பயிர் காப்பீடு செய்திட வருகிற 15–ந் தேதி வரை கால அளவு உள்ளதால், உடனடியாக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அல்லது பொது சேவை மையத்தை அணுகி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story