பாணாவரம் அருகே, மர்மமான முறையில் இறந்த வடமாநில வாலிபர் யார்? - கொலை வழக்காக மாற்றி போலீசார் தீவிர விசாரணை
பாணாவரம் அருகே மர்மமான முறையில் இறந்த வட மாநில வாலிபர் யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் இறந்தது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
பனப்பாக்கம்,
பாணாவரத்தை அடுத்த சூரைமோட்டூர் கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணை அருகே கடந்த 2-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் மயங்கி கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர் நேபாள மொழியில் பேசி உள்ளார். அந்த மொழி போலீசாருக்கு புரியாததால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த வாலிபர் யார்?, எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?, எதற்காக சூரைமோட்டூருக்கு வந்தார்? என்றும், அவர் முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா? அல்லது அந்த வழியாக சென்ற ரெயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தாரா? என்றும் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் வாலிபர் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் அவர் இதனை விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கீதா, அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் மேற்பார்வையில் சோளிங்கர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், வாலாஜா இன்ஸ்பெக்டர் பாலு, பாணாவரம் இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் கோழிப்பண்ணை மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் வாலிபரின் புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கும் தனிப்படை போலீசார் அனுப்பி உள்ளனர்.
ரெயில்வேயில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களிடமும், வடமாநிலத்தை சேர்ந்தவர்களிடமும் வாலிபரின் புகைப்படத்தை காண்பித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story