ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் - கலெக்டர் சண்முகசுந்தரம் பேட்டி
ஊரக பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு தனியாக தேர்தல் நடத்தப்படாது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக தான் தேர்தல் நடத்தப்படும்.
முதற்கட்டமாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி இன்று (அதாவது நேற்று) வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. கடந்த தேர்தல்களின் அடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து பட்டியல் வைத்துள்ளோம். நாளை (இன்று) அனைத்து கட்சி கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டம் நடைபெறும். அதன்பின்னர் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் இந்த பட்டியலில் மாற்றம் ஏற்படலாம். வேட்பாளர்களை பொறுத்து பதற்றமான வாக்குச்சாவடிகள் மாறுபடும்.
288 மண்டல அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தேர்தல் பணிகளுக்கு 40 ஆயிரம் பேர் தேவைப்படுவார்கள். 36 ஆயிரம் பேரை ஏற்கனவே தேர்வு செய்து விட்டோம். தற்போது 2 கட்டங்களாக தேர்தல் நடப்பதால் அரசு அலுவலர்கள் பற்றாக்குறை இன்றி தேர்தல் நடத்த முடியும். ஊரக பகுதிகளில் கட்டாயம் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கும்.
பறக்கும்படைகள், கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story