பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு சென்று காசநோயை கண்டறியும் நடமாடும் பரிசோதனை வாகனம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு சென்று சளி பரிசோதனை மூலம் காசநோயை விரைவில் கண்டறியும் நடமாடும் பரிசோதனை வாகனத்தை கலெக்டர் சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர்,
திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தில் சளி பரிசோதனை மூலம் காசநோயை கண்டறியும் நடமாடும் பரிசோதனை வாகனம் நேற்று வேலூருக்கு வந்தது. வேலூர் அரசினர் பென்ட்லேன்ட் மருத்துவமனையில் இருந்து இந்த பரிசோதனை வாகனம் பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் யாஷ்மின் தலைமை தாங்கினார். காசநோய்பிரிவு துணை இயக்குனர் பிரகாஷ் அய்யப்பன், மருத்துவ அலுவலர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு காசநோயை கண்டறியும் நடமாடும் பரிசோதனை வாகனத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காசநோய் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இருமல் மற்றும் பிறவகைகள் மூலமாக இந்த நோய் வேகமாக பரவும். பாதிக்கக்கூடிய மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் எளிதில் அவர்களுக்கு மற்ற நோய்கள் தொற்றிவிடும். குறிப்பாக இந்த நோய் உள்ளவர்களுக்கு தவறான பழக்க வழக்கங்கள் இல்லையென்றாலும் எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வரை 3,200 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காசநோய் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே காசநோய் பாதிப்பு அதிகமாக காணப்படும்் இடத்திற்கே நேரில் சென்று அவர்களின் சளியை பரிசோதனை செய்வதற்காக மத்திய அரசு நடமாடும் பரிசோதனை வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வாகனம் இன்று காலை (அதாவது நேற்று) வேலூர் வந்துள்ளது. இங்கு 2 நாட்கள் இருக்கும். பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக இந்த வாகனம் செல்லும். அடுத்ததாக இந்த நடமாடும் வாகனம் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செல்ல உள்ளது.
நடமாடும் பரிசோதனை வாகனமும், நடமாடும் எக்ஸ்ரே வாகனமும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனையில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே காசநோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம். மேலும் அதிகம் பேருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க முடியும். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதம் முதல் 1 ஆண்டுகள் வரை மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். நோயின் தாக்கத்திற்கேற்ப மருந்து, மாத்திரைகள் எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் கட்டாயம் 6 மாதங்கள் மருந்து, மாத்திரைகள் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தான உணவை சாப்பிட வேண்டும். அப்போதுதான் நோய் எதிர்ப்பு சக்திகள் உடலுக்கு கிடைக்கும். எனவே காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தான உணவு சாப்பிட தமிழக அரசு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்னும் 20 ஆண்டுகளில் இந்த நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story