திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஸ்டூடியோ பெண் ஊழியர் தீக்குளித்து சாவு - உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 Dec 2019 4:30 AM IST (Updated: 4 Dec 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

உணவில் மயக்க மருந்து கொடுத்து ஸ்டூடியோ உரிமையாளர் பாலியல் பலாத்காரம் செய்ததால் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாகூர்,

புதுவை சின்னக்கடை வீதியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் அரியாங்குப்பத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது பெற்றோர் திருமண ஏற்பாடுகளை துரிதமாக செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அந்த பெண் திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணிடம் புதுவை நீதிபதி சிவக்குமார் மரண வாக்குமூலம் வாங்கினார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மதுரை (வயது37) என்பவர் நடத்தி வந்த ஸ்டூடியோவில் பெண் ஊழியர் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவிலும், குளிர்பானத்திலும் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை மதுரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி தெரியவந்து அவருக்கே அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஏற்கனவே மதுரைக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அந்த பெண் இந்த முடிவை தேடிக் கொண்டதாக நீதிபதியிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார். ஸ்டூடியோ உரிமையாளர் மதுரைக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று உறவினர்கள் முறையிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அரியாங்குப்பம் போலீசார் ஸ்டூடியோ உரிமையாளர் மதுரை மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story