ஈக்குவடார் அருகே கைலாசம் என்ற பெயரில், நித்யானந்தா சாமியார் தனி நாடு, கொடி உருவாக்கி சர்ச்சை


ஈக்குவடார் அருகே கைலாசம் என்ற பெயரில், நித்யானந்தா சாமியார் தனி நாடு, கொடி உருவாக்கி சர்ச்சை
x
தினத்தந்தி 5 Dec 2019 4:00 AM IST (Updated: 5 Dec 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

ஈக்குவடார் அருகே கைலாசம் என்ற பெயரில் நித்தியானந்தா சாமியார் தனிநாடு, கொடி உருவாக்கி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பெங்களூரு, 

திருவண்ணாமலையை சேர்ந்த சாமியார், நித்யானந்தா (வயது 41), சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிற இவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

8 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பிரபல தமிழ் நடிகையுடன் நெருக்கமாக இருந்த காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அவரை பற்றிய தகவல்கள் வெளியுலகுக்கு தெரியாமல் இருந்து வந்தது.

கடந்த ஆண்டு, அவர் புதிய அவதாரத்தில் அரக்கு நிற உடையில் மீசை, தாடியுடன், திரிசூலத்துடன் காணப்பட்டார்.

கடந்த மாதம் குஜராத் மாநிலம், ஆமதாபாத் ஆசிரமத்தில் 2 பெண்கள் காணாமல் போனது தொடர்பாக நித்யானந்தா மீது வழக்கு பதிவானது.

அந்த வழக்கில் சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து, அவர்களை நன்கொடை வசூலிக்க வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நித்யானந்தாவின் பெண் சீடர்கள் பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் கைது ஆனார்கள்.

நித்யானந்தாவும் போலீசாரால் தேடப்படுகிறார் என தகவல்கள் வெளிவந்தன.

இந்தநிலையில் நித்யானந்தா, தனி நாடு, கொடி உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

தென் அமெரிக்க நாடான ஈக்குவடார் அருகே ஒரு தீவை வாங்கி நித்யானந்தா அதற்கு கைலாசம் என பெயர் சூட்டி, தனி கொடி, தனி அரசை ஏற்படுத்தி உள்ளார் என தெரிய வந்து இருக்கிறது.

கைலாசம் என பெயரிடப்பட்ட இணையதளத்தில் கைலாச நாடு பற்றி, “தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கும் உரிமையை இழந்து, உலகமெங்கும் வாழ்கிற இந்துக்களால் உருவாக்கப்பட்ட எல்லைகளற்ற நாடு” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “சனாதன இந்து தர்மத்தை பாதுகாத்து, அதை முழு உலகத்துடனும் பகிர்ந்து கொள்வது மட்டுமல்லாமல், உலகுக்கு இதுவரை தெரியாத துன்புறுத்தலின் கதையை பகிர்ந்து கொள்வதற்கு உறுதியுடன் உருவாக்கப்பட்டு இருப்பதுதான் கைலாசம்” எனவும் கூறப்பட்டுள்ளது.

இது மிகப்பெரிய இந்து நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டுக்கென ஒரு முக்கோண கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பரமசிவன், நந்தி சின்னம் இடம் பெற்றுள்ளது. இந்த நாட்டின் முக்கிய மொழிகள் என ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை ஆகும்.

கைலாசம் நாட்டின் துறைகள் உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவம், நிதி, வர்த்தகம், வீட்டு வசதி, கல்வி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இது பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. அவற்றில் இது தொடர்பான கிண்டல்களுக்கும் பஞ்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story