தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கவில்லை என சத்தியம் செய்ய தயாரா? எடியூரப்பாவுக்கு குமாரசாமி சவால்


தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கவில்லை என சத்தியம் செய்ய தயாரா? எடியூரப்பாவுக்கு குமாரசாமி சவால்
x
தினத்தந்தி 5 Dec 2019 4:15 AM IST (Updated: 5 Dec 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று சத்தியம் செய்ய தயாரா? என்று எடியூரப்பாவுக்கு குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 இடங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் எனது(குமாரசாமி) தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்த பிறகு, பா.ஜனதா அதிகார பித்து பிடித்து முழங்கியது. எந்த தவறும் செய்யாத எனக்கு பா.ஜனதாவினர் தொந்தரவு கொடுத்தனர். தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் உதவியை பெற்று சட்டவிரோதமான ஆட்சியை பா.ஜனதா அமைத்தது.

கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனது தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு அமைந்தது. ஆட்சியை நல்லபடியாக கொண்டு செல்ல எடியூரப்பா விடவில்லை. அவருக்கு ஏன் இவ்வளவு அதிகார ஆசை?. மாநிலம் வளர்ச்சி பெறவா இவ்வளவு அவசரம் காட்டினீர்கள். அப்படி என்றால் மாநிலம் வளர்ச்சி அடைந்ததா?.

வெறும் ஆட்சி அதிகாரத்தை அடைய சட்டவிரோதமான முறையில் செயல்பட்டு எடியூரப்பா முதல்-மந்திரியாகியுள்ளார். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களையும், மாயாவதி உத்தரவை மீறிய என்.மகேஷ் எம்.எல்.ஏ.வையும் பா.ஜனதா விலைக்கு வாங்கியது. அவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று எடியூரப்பா சத்தியம் செய்ய தயாரா?.

எடியூரப்பா தலைமையிலான சட்டவிரோத அரசு, இதுவரை ஏதாவது ஒரு சாதனையை செய்துள்ளதா?. முந்தைய அரசுகளின் திட்டங்களை ரத்து செய்தது, சாதி அரசியலை செய்தது, மகன்கள் மூலம் ‘கமிஷன்‘ அரசியல் செய்தது போன்றவற்றை தான் எடியூரப்பா அரசு செய்துள்ளது. எனது அரசை கவிழ்க்க பிரதமர் மோடி, அமித்ஷா விரும்பவில்லை. அதனால் தான் எடியூரப்பா பதவி ஏற்றபோது, மோடி அவருக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.

முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, கூட்டணி அரசு கவிழ்ந்ததில் எனது பங்கும் உள்ளது என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு முறை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டபோது, தேவேகவுடா உதவி செய்தார். எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பா.ஜனதா எந்த பதவியையும் வழங்கவில்லை. அத்தகைய கட்சியில் இருந்து கொண்டு, எங்களின் முதுகில் அவர் குத்திவிட்டார்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story