திண்டிவனம், செஞ்சியில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


திண்டிவனம், செஞ்சியில், உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Dec 2019 3:15 AM IST (Updated: 5 Dec 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் மற்றும் செஞ்சியில் உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திண்டிவனம்,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக, திண்டிவனம் அரசு கோவிந்தசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று வாக்கு எண்ணும் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்கு எண்ணும் மையத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்கான வசதிகள் உள்ளதா? என பார்வையிட்டார்.

மேலும் அங்கு குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும் கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நீதிராஜ், ரவீந்திரன், செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மோகன், உதவி திட்ட அலுவலர் (வேலைவாய்ப்பு) சீனிவாசன் மற்றும் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதேபோல் செஞ்சி ஒன்றியம் காரியமங்கலத்தில் உள்ள டேனி கல்லூரியும், வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலத்தில் உள்ள ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களையும் கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் கோவிந்தராஜ், உதவி இயக்குனர் மோகன், வட்டார உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செஞ்சி சுப்பிரமணியன், அறவாழி, வல்லம் குலோத்துங்கன், புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story