மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை


மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2019 3:45 AM IST (Updated: 5 Dec 2019 7:41 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது. பலவிதமான நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் அதிகமாக பெருகிவருகிறது. 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள மக்களை பக்கத்தில் உள்ள பள்ளி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்புகளை சுற்றி உள்ள தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க டவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால் வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். கொசுவை ஒழிக்கவும், தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும் மாவட்டம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், டாக்டர்கள் மருந்துகளுடன் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் கல்வி நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் மழையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்திட வேண்டும். இடிந்த வீடுகளுக்கு ரூ.20 ஆயிரம், தண்ணீர் புகுந்த வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட வீடுகளை முறையாக கணக்கெடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ள நெல், மணிலா உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயிர்களை காப்பாற்ற வேளாண்மைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழையால் 30 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகளும் விவசாயத்தை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். இவர்களை பாதுகாக்க வேலையில்லாத நிர்வாணம் அறிவிக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இவ்வாறு அந்தசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story