உள்ளாட்சி தேர்தலில் 308 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு


உள்ளாட்சி தேர்தலில் 308 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை - கலெக்டர் சண்முகசுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:15 AM IST (Updated: 5 Dec 2019 10:21 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் 308 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது என்று அனைத்துகட்சி கூட்டத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டுகள் பிரவேஷ்குமார் (வேலூர்), மயில்வாகனன் (ராணிப்பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், பா.ஜனதா உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டது. பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-


ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக காணப்படும் 40 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 390 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 743 ஊராட்சி தலைவர்கள், 6,078 கிராம வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 7,251 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும்.

அரக்கோணம், ஆற்காடு, கணியம்பாடி, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், திமிரி, வேலூர், வாலாஜா ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27-ந் தேதியும், ஆலங்காயம், அணைக்கட்டு, குடியாத்தம், ஜோலார்பேட்டை, கே.வி.குப்பம், கந்திலி, மாதனூர், காட்பாடி, நாட்டறம்பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு 30-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 924 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 6 ஆயிரத்து 384 பெண் வாக்காளர்கள், 106 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 19 லட்சத்து 86 ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர். 18 ஆயிரத்து 191 மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக 3,812 வாக்குச்சாவடிகளும், 1,910 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. 462 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 308 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் 144 பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. அந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேலூர் தந்தை ெபரியார் பாலிடெக்னிக் கல்லூரி, ஆலங்காயம் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 20 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக செயல்படும்.

கூட்டத்தில், அரசியல் கட்சியினர் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும், வாக்குச்சாவடி அமைக்கப்படும் கட்டிடங்கள் மற்றும் அங்கு செல்வதற்கான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்.

அதற்கு கலெக்டர் சண்முகசுந்தரம், ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக வாக்குச்சாவடிகள் அமைத்தால் அதிக ஊழியர்கள் தேவைப்படுவார்கள். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார். மேலும் அவர் தேர்தல் விதிமீறல்கள் மற்றும் புகார்கள் குறித்து 3 மாவட்ட கலெக்டர்களிடமும், சட்டம்-ஒழுங்கு குறித்து 3 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடமும் புகார் தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில், ஊரக வளர்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயசந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ( உள்ளாட்சி தேர்தல்) சுப்புலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story