15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 9-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை


15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 9-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 6 Dec 2019 5:00 AM IST (Updated: 5 Dec 2019 10:32 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை 9-ந் தேதி நடக்கிறது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமார சாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

17 இடங்கள் காலி

இதனால் 14 மாத குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து, கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ந் தேதி (அதாவது நேற்று) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மனுக்கள் வாபஸ்

இந்த தேர்தலில் போட்டியிட 248 வேட்பாளர்கள் 355 மனுக்களை தாக்கல் செய்தனர். சட்டப்படி பூர்த்தி செய்யப்படாத 54 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 53 பேர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். அது போக தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள். இவற்றில் ஒசக்கோட்டையில் பா.ஜனதா சார்பில் ரூ.1,200 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான முன்னாள் மந்திரி எம்.டி.பி.நாகராஜும், அவரை எதிர்த்து பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் சரத் பச்சேகவுடா சுயேச்சையாகவும் களம் இறங்கியுள்ளனர். இதனால் அந்த தொகுதி நட்சத்திர தொகுதி போன்று பரபரப்பாக இருந்தது.

அதேபோல் பா.ஜனதா சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும் சிவாஜிநகரில் தமிழரான எம்.சரவணா, ராணிபென்னூரில் அருண்குமார் புஜார் ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ராணிபென்னூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் போட்டியிட்டுள்ளார். கோகாக் தொகுதியில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பா.ஜனதா சார்பிலும், காங்கிரஸ் சார்பில் அவரது இளைய சகோதரர் லகன் ஜார்கிகோளியும் போட்டியிடுகிறார்கள்.

சரத் பச்சேகவுடாவுக்கு ஆதரவு

யஷ்வந்தபுரம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் தகுதி நீக்க எம்.எல்.ஏ. எஸ்.டி.சோமசேகர், ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஜவராயிகவுடா, காங்கிரஸ் சார்பில் நாகராஜ் ஆகியோர் மல்லுக்கட்டி உள்ளனர். கே.ஆர்.புரம் தொகுதியில் பா.ஜனதா சார்பில் தகுதிநீக்க எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ், காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி ஆகியோர் களம் கண்டுள்ளனர். இரேகெரூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் தகுதிநீக்க எம்.எல்.ஏ. பி.சி.பட்டீல், காங்கிரஸ் சார்பில் பன்னிகோட் போட்டியிட்டுள்ளனர்.

சிவாஜிநகர் தொகுதியில் தமிழரான எம்.சரவணா பா.ஜனதா சார்பிலும், ரிஸ்வான் ஹர்ஷத் காங்கிரஸ் சார்பிலும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் தன்வீர் அகமது உல்லாவும் களத்தில் உள்ளனர். மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் பா.ஜனதா சார்பில் தகுதிநீக்க எம்.எல்.ஏ. கோபாலய்யா, காங்கிரஸ் சார்பில் சிவராஜ், ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் கிரிஷ் நாசி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மொத்தத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும் போட்டியில் உள்ளன. ஜனதா தளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஒசக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவுக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியுள்ளது.

ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு

இந்த 15 தொகுதிகளில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் மொத்தம் 37 லட்சத்து 77 ஆயிரத்து 970 பேர் ஆவர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 25 ஆயிரத்து 529 பேரும், பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 52 ஆயிரத்து 27 பேரும் உள்ளனர். திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கை 414 ஆகும். இந்த வாக்காளர்களின் வசதிக்காக 4 ஆயிரத்து 185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த 15 தொகுதிகளிலும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், சிவாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட் மற்றும் ஒசக்கோட்டை ஆகிய 5 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு மந்தமாக காணப்பட்டது.

அதே நேரத்தில் பெங்களூருரை தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 10 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்து நின்று ஆர்வமாக ஓட்டுப் போட்டனர். மூத்த குடிமக்கள், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர். சில தொகுதிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, வாக்குப்பதிவு தொடங்குவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டது.

தொழில்நுட்ப கோளாறு

ஒசக்கோட்டை தொகுதியில் புவனஹள்ளி வாக்குச்சாவடியில் மின்னணு வாக்கு எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய ஓட்டுப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக காலை 8 மணிக்கு தொடங்கியது. அந்த பகுதியில் சுயேச்சை வேட்பாளர் சரத் பச்சேகவுடாவின் ஆதரவாளர்களுக்கும், பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு பிரச்சினையை தீர்த்துவைத்தனர்.

அதே தொகுதியில் பென்டகானஹள்ளி வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் ஒருவருக்கும், வேட்பாளரின் ஏஜெண்டு ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு உண்டானது. விஜயநகர் தொகுதிக்கு உட்பட்ட புத்னாபுரா கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சென்று, அந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அந்த கிராம மக்கள் தேர்தலில் பங்கேற்று வாக்களித்தனர்.

அதானி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மகேஷ் குமட்டள்ளி வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். ஆனால் மின்னணு வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, ஓட்டுப்பதிவு தொடங்க அரை மணி நேரம் ஆனது. இதனால் மகேஷ் குமட்டள்ளி சற்று ஏமாற்றம் அடைந்தார். அதன்பிறகு அவர் வாக்களித்துவிட்டு சென்றார். கே.ஆர்.பேட்டை தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் பி.எல்.தேவராஜ், வாக்களிக்க பன்டிஒலே கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்தார். அவர் வாக்கு எந்திரத்தை, வாஸ்துப்படி திருப்பி வைத்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

பரபரப்பான சூழல்

அதேபோல் அந்த தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நாராயணகவுடா, கே.ஆர்.பேட்டை நகரில் கர்நாடக பப்ளிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு குடும்பத்துடன் வந்தார். அங்கு அவர் தனது காலணியை கழற்றிவிட்டு வாக்களித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது. யஷ்வந்தபுரம் தொகுதியில் வாக்காளர் ஒருவரின் வாக்கை, வேறு ஒருவர் போட்டுவிட்டு சென்றதாக புகார் எழுந்தது.

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனில் சிக்கமாது, ஓட்டுப்போட உன்சூர் தொகுதியில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால், சிக்கமாது எம்.எல்.ஏ.வை போலீசார் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து சிக்கமாது தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

போலீசார் மீது நடவடிக்கை

இதுகுறித்து சித்தராமையாவுக்கு காங்கிரசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மைசூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சித்தராமையா பேசி, சிக்கமாது எம்.எல்.ஏ.வை அவமதித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். அதற்கு போலீஸ் சூப்பிரண்டு, முறைப்படி எழுத்து மூலமாக புகார் கொடுத்தால், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதுகுறித்து சித்தராமையா சிக்கமாதுவுக்கு தகவல் தெரிவித்து, போராட்டத்தை கைவிடும்படி கூறினார். அதன்பிறகு சிக்கமாது போராட்டத்தை கைவிட்டார்.

15 தொகுதிகளிலும் சேர்த்து மதியம் 3 மணி நிலவரப்படி 46.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி 60 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் அதிகபட்சமாக சிக்பள்ளாப்பூர் தொகுதியில் 60.43 சதவீதமும், குறைந்தபட்சமாக கே.ஆர்.புரம் தொகுதியில் 29.25 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. இந்த தேர்தலில் மொத்தம் 8,326 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 8,186 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 7,876 வி.வி.பேட் எந்திரங்களும் (யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள்) பயன்படுத்தப்பட்டன. அசம்பாவித சம்பவங்களை தடுக்க வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

ஓட்டு எண்ணிக்கை

இந்த இடைத்தேர்தல் பணியில் 19 ஆயிரத்து 299 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 13 ஆயிரத்து 752 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 2,511 பேர் மத்திய ஆயுதப்படை போலீசார் ஆவார்கள்.

வாக்குகள் பதிவான மின்னணு வாக்கு எந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருகிற 9-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

Next Story