அவினாசி அருகே, நாயக்க மன்னர் கால சூலக்கல் கண்டெடுப்பு
அவினாசி அருகே கணியாம்பூண்டி கிராமத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்கால சூலக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சேவூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகாவுக்குட்பட்டது, கணியாம்பூண்டி கிராமம். மண்ணும், மலையும் இயற்கை செல்வங்களும் நிறைந்த புண்ணிய பூமி இது. சரித்திர பக்கங்களில் நீங்காத இடம் பெற்ற மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியாகும். இந்த நிலையில் கவுசிகா நதிக்கரை நாகரிகம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முடியரசு கவுசிகா நதிக்கரை அருகே வரலாற்றுச் சின்னமான சூலக்கல் ஒன்றை கண்டார்.
இது 2½ அடி உயரமும், 1¼ கால் அடி அகலமும் உள்ள கருங்கல் சிற்பமாகும். முன்பக்கம் மற்றும் பின்பக்கத்திற்கு இடைப்பட்ட பக்கவாட்டுப் பகுதியின் அகலம் ¾ அடியாக உள்ளது. கல்லின் இருபுறமும் சூலம் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கிய பக்கத்தில் சூலத்தின் மேலே வலதுபுறம் நிலாப்பிறை வடிவமும், இடது புறத்தில் குறுவாள் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. நிலாப்பிறை மற்றும் குறுவாள் அடையாளங்கள் விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் ஆட்சியைக் குறிப்பதாகும்.
இது கொங்கு மண்டலத்தை சார்ந்த வட பரிகார நாட்டு பகுதியை சேர்ந்தது. இப்பகுதியானது அக்காலத்தில் நஞ்சை, புஞ்சை நிலங்களாகவும் இருந்துள்ளது.
சூலக்கற்கள் நடப்பட்ட நிலங்கள் இறையிலி நிலங்கள் எனப்படுகின்றன. இந்த நிலங்களுக்கு அரசாங்க வரி கிடையாது. ஆனால் அந்த வரிக்கு ஈடான தொகையை சிவாலயப் பராமரிப்புக்காக ஆலய கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்பது கடமையாகும்.
இத்தொகை மூலம் நந்தாவிளக்கு, அமுதுபடி போன்ற பராமரிப்புச் செலவினங்கள் செய்யப்பட்டன. இந்த செலவுகளை எளிதாக செய்ய கொடை தந்த நிலங்களே இவை ஆகும். இத்தகைய இறையிலி நிலங்களின் நான்கு மூலைகளிலும் சூலக்கற்கள் நடப்படுவது வழக்கம். நீர்நிலையை ஒட்டிய நிலமான இதில் நீர்வழி இருமூலையாக கருதப்பட்டு பின்னர் அளக்கப்பட்ட நிலத்தின் இரு மூலைகளிலும் சூலக்கல் நடப்பட்டதாக கருதலாம். ஆட்சி மாற்றங்கள் மற்றும் விழிப்புணர்வு இல்லாத நிலை காரணமாக இத்தகைய சூலக்கற்களைக் காண்பதே அரிதாகிவிட்டது.
கோவில்களில் தங்குதடையின்றிப் பூஜைகள் நடக்கவும் பூஜை செலவினங்களை நிறைவாகச் செய்யவும் மன்னர்கள் யோசித்து ஏற்படுத்திய ஆலய நிதிக் கருவூலத்திற்கான வருவாய் மூலங்களே இறையிலி நிலங்கள் ஆகும். இதற்கான நிலங்களின் அடையாளங்களே சூலக்கற்கள் ஆகும்.
இப்பகுதி அருகே ஏற்கனவே கவுசிகா நதிக்கரையோரமாக வஞ்சிபாளையத்தில் ஒரு சூலக்கல்லானது முடியரசு மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் முதலை உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. முதலை வாய்ப் பிள்ளைக்கல் எனப்படும் இச்சூலக்கல்லும் தற்போதைய கணியாம்பூண்டி சூலக்கல்லும் கவுசிகா நதிக்கரையோர அவினாசிலிங்கேஸ்வரர் ஆலய இறையிலி நிலங்களைக் குறிப்பதாக உள்ளன.
இது பற்றி தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர் பூங்குன்றனிடம் கருத்துக் கேட்டபோது, விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் போது ஏற்படுத்தப்பட்ட இறையிலி நிலங்களுக்கான அடையாளம் இச்சூலக்கல் என உறுதிப்படுத்தினார்.
இதுபற்றி மாவட்டத் தொல்லியல் அதிகாரி நந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய பராமரிக்கப்படாத மற்றும் சிறிதளவு சிதலமடைந்த வரலாற்றுச் சின்னங்களை அருங்காட்சியகத்தில் வைத்துப்பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story