மாவட்டத்தில் முதல் கட்டமாக 1,579 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் - கலெக்டர் மெகராஜ் அறிவிப்பு


மாவட்டத்தில் முதல் கட்டமாக 1,579 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் - கலெக்டர் மெகராஜ் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:15 AM IST (Updated: 5 Dec 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 8 ஒன்றியங்களில் 1,579 பதவிகளுக்கு வருகிற 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக கலெக்டர் மெகராஜ் கூறினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய 8 ஒன்றியங்களில் 893 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 306 ஆண்கள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 48 பெண்கள், 16 திருநங்கைகள் என மொத்தம் 4 லட்சத்து 59 ஆயிரத்து 370 பேர் வாக்களிக்க உள்ளனர்.

இதன் மூலம் 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 86 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 164 ஊராட்சி மன்ற தலைவர்கள், 1320 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,579 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த தேர்தலில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகளும், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு பச்சை நிற வாக்குச்சீட்டுகளும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டுகளும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை மற்றும் நீல நிற வாக்குச்சீட்டுகளும் பயன்படுத்தப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,729 வாக்குச்சாவடிகளில் 263 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என முதல் கட்டமாக கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.

முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். உள்ளாட்சி தேர்தல் பணியில் மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முதல்கட்ட தேர்தல் முடிவுகளை எண்ணுவதற்கு வசதியாக மாவட்டத்தில் 15 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. 2-ம் கட்டமாக மீதமுள்ள 7 ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதி தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோவிந்தராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story