கோவில்களில் மட்டுமே 19 ஆண்டுகளாக கைவரிசை: திருட வந்த இடத்தில் போதையில் தூங்கி போலீசிடம் சிக்கியவரால் பரபரப்பு


கோவில்களில் மட்டுமே 19 ஆண்டுகளாக கைவரிசை: திருட வந்த இடத்தில் போதையில் தூங்கி போலீசிடம் சிக்கியவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 5 Dec 2019 11:08 PM IST)
t-max-icont-min-icon

19 ஆண்டுகளாக கோவில்களை நோட்டமிட்டு திருடி வந்தவர், திருட வந்த கோவிலில் போதையில் தூங்கியதால் போலீசாரிடம் சிக்கினார். அவர் குறித்த பரபரப்பு தகவல்களும் தெரியவந்தன.

விருதுநகர்,

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் வச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் ஒருவர் போதையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அருகே இரும்பு கம்பி, டார்ச் லைட் கிடந்தன.

இதையடுத்து போலீசார் அவரை மயக்கம் தெளியவைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தத்தனேரி காலனி பகுதியை சேர்ந்த செந்தூர் என்ற செந்தூர்பாண்டி (வயது55) என்பதும், கட்டிட தொழிலாளி எனவும் தெரியவந்தது. அவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

மேலும் இவருக்கு கட்டிட தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லையாம். அதனால் திருட முடிவு செய்துள்ளார். வீடுகளுக்குச் சென்று கைவரிசை காட்டாமல், கோவில்களை நோட்டமிட்டு திருடி வந்துள்ளார். அதுவும் கடந்த 2001-ம் ஆண்டு முதல் திருடி வந்துள்ளதாக போலீசில் தெரிவித்துள்ளார்.

திருட நினைக்கும் கோவிலில் பகலில் சென்று நோட்டமிட்டு, இரவில் புகுந்து பொருட்களையும், நகை, பணத்தையும் அள்ளிச் செல்வது இவரது வாடிக்கையாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் புலிகுத்தி கிராமத்தில் உள்ள சிவன்கோவில் உண்டியல் திருட்டு போனது. அதனை செந்தூர்பாண்டிதான் தூக்கிச் சென்று உடைத்து, அதில் இருந்த ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 670-ஐ எடுத்து மது, விருந்து என்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் செந்தூர் பாண்டிக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க ஆசை வந்துள்ளது. இதற்காக ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள கோவில்களை நோட்டமிட்டுள்ளார்.

பெருமாள் கோவிலில் இரவில் புகுந்து திருட திட்டமிட்ட அவர், அதற்கு முன்னதாக மது குடித்துள்ளார். அப்படியே கோவிலுக்கு வந்த செந்தூர் பாண்டி, கோவில் வளாகத்திலேயே போதையில் உறங்கிவிட்டதால், ேராந்து சென்ற போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

இதையடுத்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 500 மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவில்களை நோட்டமிட்டு திருடி வந்த கொள்ளையன் சிக்கியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story