சித்தராமையாவும் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் ரமேஷ் ஜார்கிகோளி சொல்கிறார்
சித்தராமையாவும் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் என்று முன்னாள் மந்திரியும், தற்போது கோகாக் தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
பெங்களூரு,
சித்தராமையாவும் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் என்று முன்னாள் மந்திரியும், தற்போது கோகாக் தொகுதி பா.ஜனதா வேட்பாளருமான ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
சித்தராமையாவும் பா.ஜனதாவில் சேருவார்
பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டுள்ள ரமேஷ் ஜார்கிகோளி தனது ஜனநாயக கடமையை செய்துவிட்டு நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு பொறுப்பு இருப்பதால்தான் நான் பேசுகிறேன். ஜனநாயக கடமையை செய்வது எனது பொறுப்பு. முதலில் என்னைப்போல் கம்பீரமாக பேச கற்றுக் கொள்ள வேண்டும். என்னைப் பற்றி பலர் விமர்சிக்கிறார்கள். அரசியலில் யாரையும் ஏமாற்றக்கூடாது, கட்சி தாவல் இருக்கக்கூடாது என்றும் சொல்லும் சித்தராமையாவே விரைவில் பா.ஜனதாவில் சேருவார். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்“ என்று கூறினார்.
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டுள்ள அருண் குமார் புஜார் நேற்று தனது மனைவியுடன் குமாரபட்டணம் கூடியாலா ஹொசபேட்டேயில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டார். பின்னர் அவர் கூறுகையில், “15 தொகுதிகளிலும் பா.ஜனதாவின் வெற்றி உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது“ என்றார்.
வீரப்ப மொய்லி
சிக்பள்ளாப்பூரில் முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி தனது மனைவி மாலதியுடன் வந்து வாக்களித்தார். கோகாக் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள அசோக் பூஜாரி நேற்று தனது குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் தீர்மானிப்பார்கள். எனக்காக வேலை பார்த்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் சகஜம். தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் தேவேகவுடாவும், குமாரசாமியும் என்னை ஆதரிப்பார்கள்“ என்று கூறினார்.
ஆனந்த் சிங்
பெலகாவி மாவட்டம் காக்வாட் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கியுள்ள ஸ்ரீமந்த் பட்டீல் தனது குடும்பத்தினருடன் சென்று கெம்பவாடா கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டார். பல்லாரி மாவட்டம் விஜயநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முத்லாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தகுதி நீக்க எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் வந்து ஓட்டுப்போட்டார்.
ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரில் முன்னாள் சபாநாயகர் கே.பி.கோலிவாட் வாக்களித்துவிட்டு நிருபர்களிடம் கூறுகையில், “நாட்டில் அரசியலமைப்பு மாற்றி அமைத்த பா.ஜனதாவுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். காங்கிரசுக்கு வாக்களியுங்கள். முதலாளிகள் முதலாளிகளாகவே இருக்கிறார்கள். தொழிலாளர்கள் தொழிலாளிகளாகவே இருக்கிறார்கள். நாட்டில் மாற்றத்தை கொண்டுவர காங்கிரசால் மட்டுமே முடியும்“ என்று கூறினார்.
துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி
உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்புரா சட்டசபை தொகுதியில், அரபைலு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 64-வது வாக்குச்சாவடியில் பா.ஜனதா வேட்பாளர் சிவராம் ஹெப்பார் வாக்களித்தார். பெங்களூருவுக்கு உட்பட்ட சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் ஹர்ஷத் ஓட்டுப்போட்டுவிட்டு நிருபர்களிடம் கூறுகையில், “சிவாஜிநகர் தொகுதி மக்களின் ஆசீர்வாதம் எனக்கு உண்டு. பா.ஜனதா எத்தனை திட்டம் போட்டாலும் அது நடக்காது. ஆபரேஷன் தாமரை மூலம் இத்தொகுதி எம்.எல்.ஏ.வை தங்கள் பக்கம் பா.ஜனதா இழுத்தது. அதனால்தான் இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது“ என்று தெரிவித்தார்.
அதானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நாகனூரு பி.கே. கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நேற்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தனது குடும்பத்தினருடன் சென்று ஓட்டுப்போட்டார்.
Related Tags :
Next Story