தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தில் மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் கடந்த 15 நாட்களாக மழைநீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. நேற்று அந்த பகுதியில் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் தூத்துக்குடி-ராமேசுவரம் ரோட்டில், பொதுமக்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. கூறும்போது, ‘சுந்தரவேல்புரம் 1-வது தெரு முதல் 9-வது தெரு வரை சுமார் 15 நாட்களாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதில் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இங்குள்ள மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீரை அகற்ற வழி இருந்தும், அதனை மாநகராட்சி நிர்வாகம் மோட்டார் வைத்து அகற்றாமல் உள்ளது. ஆகையால் உடனடியாக தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story