சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை பா.ஜனதா கண்டனம்
சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படாததற்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்து ஒருவாரம் ஆகியும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படாததற்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது.
சிவசேனா தலைமையில் ஆட்சி
மராட்டியத்தில் சிவசேனா கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மராட்டிய வளர்ச்சி முன்னணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந் தேதி ஆட்சி அமைத்தது.
இந்த கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவி ஏற்றுக்கொண்டதுடன், அப்போது 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் என 6 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் பதவி ஏற்று ஒரு வாரம் கடந்த நிலையில் மந்திரிகளுக்கு இதுவரை இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதற்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆஷிஸ் செலார் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
அமைதியின்மை
மராட்டிய வளர்ச்சி முன்னணி பதவியேற்றபோது சுதந்திரமாக செயல்படுவோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் பதவியேற்று 8 நாட்கள் ஆன பின்னரும் இதுவரை மந்திரிகளுக்கு இலாகா கூட ஒதுக்கப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது.கூட்டணியில் உள்ள 3 கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே தற்போது பெரும் அமைதியின்மை நிலவி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் இந்த வார தொடக்கத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் டெல்லியில் கூடி இலாகா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பிரபுல் படேல் மற்றும் காங்கிரஸ் தலைவர் அகமத் படேல், பாலசாகேப் தோரட், அசோக் சவான் மற்றும் நிதின் ராவுத் ஆகியோர் கலந்துகொண்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியுடன் பேசி கூடிய விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story