4 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐதராபாத் போலீசார் சரியான முடிவை எடுத்துள்ளனர் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பேட்டி
4 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐதராபாத் போலீசார் சரியான முடிவை எடுத்துள்ளனர் என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
4 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் ஐதராபாத் போலீசார் சரியான முடிவை எடுத்துள்ளனர் என்று போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
சரியான முடிவு
ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை விவரங்களை தெலுங்கானா அரசிடம், அந்த மாநில போலீசார் தினமும் தெரிவித்து வந்தனர். தற்போது இந்த வழக்கில் கைதான குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது 4 குற்றவாளிகளும் போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இருக்கிறார்கள்.
ஐதராபாத் போலீசார் சரியான நேரத்தில், சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள். போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்த 4 குற்றவாளிகளில் ஒருவர் தப்பித்து இருந்தால் கூட, போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கும். அவ்வாறு ஏதாவது ஒரு குற்றவாளி தப்பித்து இருந்தால், இந்த வழக்கே வேறு திசைக்கு திருப்பட்டு இருக்கும். ஆனால் சரியான நேரத்தில், தைரியமாக செயல்பட்டு ஐதராபாத் போலீசார் முடிவு எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ஐதராபாத் போலீசாரின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன்.
செயலியை பதிவிறக்கம்...
பெங்களூருவில் பெண்கள், குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பு வழங்க போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பெண்களின் பாதுகாப்புக்காக தனியாக செல்போன் செயலியை பெங்களூரு போலீசார் தொடங்கியுள்ளனர். இந்த செல்போன் செயலியை முதலில் 1 லட்சம் பேர் தான் பயன்படுத்தி வந்தனர். ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பின்பு, பெங்களூரு போலீசாரால் தொடங்கப்பட்டுள்ள செல்போன் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 40 ஆயிரம், அந்த செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
செல்போன் வசதி இல்லாத பெண்கள், 100 என்ற எண்ணுக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். அந்த பெண்கள் தொடர்பு கொண்ட 9 நிமிடத்தில் ஒய்சாலா வாகனத்தில் ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிற்பார்கள். அதனால் எந்த பெண்களும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. செல்போன் வைத்திருக்கும் பெண்கள் கண்டிப்பாக பெங்களூரு போலீசாரின் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்ற பெண்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பாஸ்கர்ராவ் கூறினார்.
Related Tags :
Next Story