பாபர் மசூதி இடிப்பு தினம்: சேலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 180 பேர் கைது
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சேலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய த.மு.மு.க., எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 180 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்,
பாபர் மசூதி இடிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் ஷேக் முகமத் தலைமை தாங்கினார்.
அப்போது, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும், பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 115 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அப்சர் அலி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 13 பெண்கள் உள்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 180 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சேலம் மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டிருந்தது. போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story