சாலையின் குறுக்கே மாடு ஓடியதால் விபத்து: பஸ் கவிழ்ந்து பெண் பலி; 20 பேர் படுகாயம் சேரன்மாதேவி அருகே பரிதாபம்


சாலையின் குறுக்கே மாடு ஓடியதால் விபத்து: பஸ் கவிழ்ந்து பெண் பலி; 20 பேர் படுகாயம் சேரன்மாதேவி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 7 Dec 2019 4:00 AM IST (Updated: 7 Dec 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவி அருகே சாலையின் குறுக்கே மாடு ஓடியதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து பெண் பலியானார்.

சேரன்மாதேவி, 

சேரன்மாதேவி அருகே சாலையின் குறுக்கே மாடு ஓடியதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து பெண் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ் கவிழ்ந்தது

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு நேற்று காலை 10 மணிக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. நெல்லையை அடுத்த தருவையை சேர்ந்த அருண்குமார் (வயது 40) என்பவர் பஸ்சை ஓட்டினார். இந்த பஸ்சில் சுமார் 70 பயணிகள் இருந்தனர்.

சேரன்மாதேவி அருகே உள்ள சங்கன்திரடு விலக்கு பகுதியில் காலை 10.45 மணிக்கு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஒரு மாடு ஓடியது. இதனால் மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் அருண்குமார் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்த முயன்றார். ஆனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தில் பஸ் மோதி, அருகே உள்ள நீரோடையில் கவிழ்ந்தது.

பெண் பலி

இந்த விபத்தில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பலத்த சேதமடைந்த பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி கல்லிடைக்குறிச்சி கரந்தை இடக்குடி தெருவை சேர்ந்த கணேசனின் மனைவி லதா (47) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் அருண்குமார், காருக்குறிச்சியை சேர்ந்த மகாதேவன் (65), கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ரேவதி (48), அய்யனம் (55), வனஜா (52), லட்சுமி (48) உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பயணிகள் அனைவரும் ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்‘‘ என்று அபயக்குரல் எழுப்பினர். சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீசார் மற்றும் சேரன்மாதேவி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்டனர். அருண்குமார், மகாதேவன், ரேவதி, அய்யனம், வனஜா, லட்சுமி ஆகிய 6 பேரை சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றவர்களை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தார்கள். லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும், தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா, உதவி கலெக்டர் மணி‌‌ஷ் நாரணவரே, நெல்லை தாசில்தார் ராஜேஸ்வரி, சேரன்மாதேவி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story