தர்மபுரி,கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 368 பேர் கைது


தர்மபுரி,கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 368 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2019 10:30 PM GMT (Updated: 6 Dec 2019 7:36 PM GMT)

பாபர் மசூதி இடிப்புக்கு நீதி கேட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 368 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிரு‌‌ஷ்ணகிரி, 

பாபர் மசூதி இடிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கிரு‌‌ஷ்ணகிரியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க.) சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிரு‌‌ஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர் முகம்மது தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் கான் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் வாஹித் பா‌ஷா, மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ரியாஸ், மேற்கு மாவட்ட செயலாளர் கலீல் பா‌ஷா, பொருளாளர்கள் ஜாவித், ஜூபைர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கண்டன உரையாற்றினார். இதில், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும். சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன், பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் இர்பானுல்லா ஹீசைனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 164 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட சோ‌ஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) கட்சி சார்பில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்தும், நீதி கேட்டும் கிரு‌‌ஷ்ணகிரியில் பழையபேட்டை காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ‌‌ஷபியுல்லா வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் ‌ஷாநவாஸ், மஸ்ஜித் பொறுப்பாளர்கள் முஸ்தாக் அகமது, கவுஸ் செரீப், காதர் உசேன், ‌ஷாபுத்தீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் முகமது கலீல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏஜாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணை தலைவர் அம்ஜத் பா‌ஷா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சலாமத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சவுத் அகமது மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தடைைய மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 77 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 164 பேரையும், எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 77 பேரையும் என மொத்தம் 241 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்து தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கட்சியின் மாவட்ட தலைவர் யாசின் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து அந்த கட்சியை சேர்ந்த 57 பேரை அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தர்மபுரி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஜாவித் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பைரோஸ்அன்சாரி, மாநில பேச்சாளர் அஸ்கர்அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நியாமத் உள்ளிட்ட நிர்வாகிகள் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

பாபர் மசூடி இடிப்பு சம்பவத்தை கண்டித்தும், பாபர் மசூதியை இடித்ததில் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பியபடி தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த கட்சியை சேர்ந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு் கைதான 127 பேரும் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். நேற்று இரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story