100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் 14 இடங்களில் ஆர்ப்பாட்டம்


100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் 14 இடங்களில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2019 4:00 AM IST (Updated: 7 Dec 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி திருவாரூர் மாவட்டத்தில் 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விவசாய தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

திருவாரூர், 

திருவாரூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மாவட்ட துணைச்செயலாளர் ஞானமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் ஆண்டுக்கு 100 நாள் கட்டாயமாக வேலை வழங்க வேண்டும். ஆனால் 100 நாள் வேலை வழங்க அரசு மறுக்கிறது, வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் 6 மாதமாகியும் ஊதியம் வழங்கவில்லை. மேலும் ஊராட்சிகளில் தூய்மை காவலர்களாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் 4 மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை. வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 14 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததற்கு காரணமாக இருந்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கொசுவலை வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story