பாபர் மசூதி இடிப்பு தினம்: தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 238 பேர் கைது
நெல்லை மேலப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 238 பேர் கைது செய்யப்பட்டனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நெல்லை,
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லை மேலப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 238 பேர் கைது செய்யப்பட்டனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
ஆர்ப்பாட்டம்
நெல்லை மாநகர பகுதியில் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் நடத்த தடை அமலில் உள்ளது. இதனால் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் நேற்று காலை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட தலைவர் கனி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரபிக் அகமது, மாநில பேச்சாளர் செய்யது அகமது ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.
238 பேர் கைது
இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர் மசூதி கட்டவேண்டும். மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 238 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையொட்டி மேலப்பாளையத்தில் உதவி போலீஸ் கமிஷனர் பெரியசாமி, இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, பர்னபாஸ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடைகள் அடைப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையத்தில் பஜார் திடல், கடை வீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் ஆட்டோ, கார்களும் ஓடவில்லை. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி
தென்காசியில் ஹைதர் அலி தலைமையில் த.மு.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தென்காசி மவுண்ட் ரோடு ஆட்டோ நிறுத்தத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அபாபீல் மைதீன் தலைமை தாங்கினார். இறையடியான் ஷேக், பொன்னானி சேட், ஜாபர் ஷெரீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொதுச் செயலாளர் நெல்லை உஸ்மான் கான், மாவட்ட தலைவர் கோக்கர் ஜான் ஜமால், செயலாளர் கொலம்பஸ் மீரான், துணை செயலாளர்கள் சலீம், திவான் ஒலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story