களக்காட்டில் நகர பஞ்சாயத்து வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் குடியிருப்பு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு
களக்காட்டில் குடியிருப்பு பகுதிகள் அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நகர பஞ்சாயத்து வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
களக்காடு,
களக்காட்டில் குடியிருப்பு பகுதிகள் அருகே குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நகர பஞ்சாயத்து வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குப்பைகள் கொட்ட எதிர்ப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். களக்காடு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகர பஞ்சாயத்து ஊழியர்கள் களக்காடு மூனாற்று பிரிவில் கொட்டி வருகின்றனர்.
அதன் அருகே மாசான சுவாமி கோவில், கக்கன்நகர், நாடார் புதுத்தெரு குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்கள் ஆகியவை உள்ளன. எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் ஊழியர்கள் தொடர்ந்து அங்கேயே குப்பைகளை கொட்டி வந்தனர்.
வாகனம் சிறைபிடிப்பு
இந்த நிலையில் நேற்று ஊழியர்கள் ஒரு வாகனத்தில் குப்பைகள் கொட்ட அந்த பகுதிக்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாடார் புதுத்தெரு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான அந்த வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நகர பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த இடத்தில் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story