அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தாதர் சைத்ய பூமியில் கவர்னர், முதல்-மந்திரி மரியாதை லட்சக்கணக்கான மக்களும் அஞ்சலி செலுத்தினர்
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தாதர் சைத்ய பூமியில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
மும்பை,
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி தாதர் சைத்ய பூமியில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் லட்சக்கணக்கான மக்களும் அம்பேத்கர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பொதுமக்கள் அஞ்சலி
இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கிய சட்டமேதை அம்பேத்கரின் உடல் மும்பை தாதரில் உள்ள சைத்யபூமியில் தகனம் செய்யப்பட்டது. அவரது நினைவு நாளில் அஞ்சலி செலுத்த ஆண்டுதோறும் இங்கு லட்சக்கணக்கான மக்கள் குவிவது வழக்கம். இந்த ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று முன்தினம் முதலே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மும்பைக்கு படையெடுத்து வரத்தொடங்கினர்.
அவர்கள் தங்க சிவாஜி பார்க் மைதானத்தில் அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கு குடிநீர் மற்றும் உணவு பொருட்களை வழங்கினர்.
இந்தநிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரெயில், பஸ், லாரிகளில் சாரை சாரையாக பொதுமக்கள் வந்தனர். அவர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சைத்ய பூமியில் அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கானவர்கள் சைத்ய பூமியில் அஞ்சலி செலுத்த வந்ததால் நேற்று மக்கள் வெள்ளத்தில் தாதர் சிவாஜி பார்க் பகுதி தத்தளித்தது.
கவர்னர், முதல்-மந்திரி
இதேபோல கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்களும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் சைத்ய பூமியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த புத்த மத துறவிகளும் அம்பேத்கரின் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
பலத்த பாதுகாப்பு
முன்னதாக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் தாதர் சிவாஜி பார்க் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Related Tags :
Next Story