மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை + "||" + Erode Unprecedented price rise Big onion For Rs.200 per kg Sales

ஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை

ஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை
ஈரோட்டில் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து பெரிய வெங்காயம் கிலோ ஒன்று ரூ.200-க்கு விற்பனையானது.
ஈரோடு, 

சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக வெங்காயம் உள்ளது. இதேபோல் ஓட்டல்களிலும் வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாகவும் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும், அதன் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயத்தை பொதுமக்கள் ரூ.120 கொடுத்து வாங்கிச்சென்றனர். ஆனால் விலை படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் நேற்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று காய்கறி வாங்க வந்த பெண்கள் வெங்காயத்தின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். வெங்காயத்தை உரிக்கும்போது தான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் நேற்று விலையை கேட்ட உடனே பெண்களின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

இதுகுறித்து குடும்ப பெண்கள் கூறும்போது, ‘நாங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருளே வெங்காயம் தான். சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் இப்படி உயர்ந்து கொண்டே சென்றால் நாங்கள் எப்படித்தான் சமையல் செய்வது என்றே தெரியவில்லை.

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கித்தான் நாங்கள் பீரோவில் பத்திரமாக வைப்போம். ஆனால் தற்போது வெங்காயத்தை வாங்கி பீரோவில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

இதுகுறித்து வெங்காய வியாபாரி ஹக்கீம் என்பவர் கூறும்போது, ‘புனே மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது அங்கும் வெங்காயம் தட்டுப்பாட்டில் உள்ளதால் ஈரோட்டிற்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரும் வெங்காயத்தை நாங்கள் உலர வைத்து பக்குவப்படுத்தி விற்பனை செய்து வருகிேறாம்.

பொதுவாக ஈரோடு மாவட்டத்தில் வெங்காயத்தின் தேவை குறைந்த அளவில் தான் இருக்கும். அதனால் தற்போது அதைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையும் விற்பனையானது. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும். வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது’ என்றார்.