தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் 11 மாதங்களில் செயல்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் 11 மாதங்களில் செயல்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2019 4:45 AM IST (Updated: 7 Dec 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில், புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் 11 மாதங்களில் செயல்படும் என்று திண்டுக்கல்லில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் நேற்று ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் ரத்த தானம் செய்பவர்களை ஊக்குவித்து வருகிறோம். ஓராண்டிற்கு 8 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. அதில் 4 லட்சம் யூனிட் அரசு ரத்த வங்கிகள் மூலமாகவும், 4 லட்சம் யூனிட் தன்னார்வலர்கள் மூலமும் பெறப்படுகிறது. இந்தியாவில், தமிழகம் ரத்த தானத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் கண் தானம், உடல் உறுப்பு தானம் ஆகியவற்றிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

தமிழக முதல்-அமைச்சரின் பெரிய முயற்சியால் 15 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவ கல்லூரி பணிகளை ஓராண்டில் செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் புதிதாக 9 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று இருக்கிறோம். திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையின் அடிப்படையில், திண்டுக்கல்லுக்கும் ஒரு மருத்துவக்கல்லூரி கிடைத்துள்ளது.

புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கு, தமிழக அரசு நிதியை ஒதுக்கி உள்ளது. அதேபோல் மத்திய அரசும் முதல்கட்ட நிதியை ஒதுக்கி இருக்கிறது. இதையடுத்து மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி அடுத்த மாதம் (ஜனவரி) விடப்படுகிறது. இதையடுத்து திட்டமிட்டபடி 11 மாதங்களில் தலா 150 இடங்களுடன், புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்படும்.

இந்தியாவில் அதிகமான மருத்துவ படிப்பு இடங்களை வைத்து இருப்பது தமிழகம் தான். தற்போது அதிகமான மருத்துவக்கல்லூரிகளை பெற்ற மாநிலமாகவும், தமிழகம் திகழ்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story