கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி பலி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன், சிறுமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
கோவை,
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதையடுத்து டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்பட பல்வேறு வகையான காய்ச்சல்களும் வேகமாக பரவி வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு நோயாளிகளை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இங்கு நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 43 பேரும், காய்ச்சலுக்கு 114 பேரும் அனுமதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப் பட்டவர்களை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் பரிதாபமாக இறந்தனர். அதன் விவரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் திருமுருகன் நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் தர்னிஷ் (வயது 8). இவனுக்கு கடந்த சில நாட்களாக தீராத காய்ச்சல் இருந்தது. இதற்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் தர்னிஷ் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவனை மேல்சிகிச்சைக்காக கடந்த 4-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தர்னிஷ் நேற்று காலை பரிதாபமாக இறந்தான்.
அதுபோன்று திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த சிலுவை புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருடைய மகள் ஜெசிந்தா (5). இவளுக்கு தீராத காய்ச்சல் இருந்ததால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஜெசிந்தாவுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவள் கடந்த 3-ந் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டாள். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெசிந்தா நேற்று பரிதாபமாக இறந்தாள். கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒரே நாளில் 2 பேர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, பொதுவாக டெங்கு காய்ச்சல் முற்றிய நிலையில்தான் நோயாளிகளை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வருகிறார்கள். ஆரம்பத்திலேயே இந்த காய்ச்சலை கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என்றனர்.
Related Tags :
Next Story