தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக ஏக்நாத் கட்சே அணி திரட்டுகிறாரா? மாநில பா.ஜனதா தலைமை மீது பரபரப்பு குற்றச்சாட்டு
தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக ஏக்நாத் கட்சே கட்சியில் அணி திரட்டுவதாக கூறப்படுகிறது.
மும்பை,
தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக ஏக்நாத் கட்சே கட்சியில் அணி திரட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் மாநில பா.ஜனதா மீது பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார்.
தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக அணி?
மராட்டிய மாநில வருவாய், வேளாண் துறை மந்திரியாக இருந்தவர் ஏக்நாத் கட்சே. கடந்த 2016-ம் ஆண்டு நிலமுறைகேடு புகாரில் சிக்கியதால் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். எனினும் பின்னாளில் இந்த விவகாரத்தில் ஏக்நாத் கட்சே குற்றமற்றவர் என மாநில லஞ்ச ஒழிப்பு துறை சான்று வழங்கியது. சமீபத்தில் ஏக்நாத் கட்சே, தனது மகள் ரோகிணி மற்றும் பங்கஜா முண்டேவின் தோல்விக்கு பா.ஜனதாவினர் சிலரே காரணம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்தநிலையில் பா.ஜனதாவில் தேவேந்திர பட்னாவிசால் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படும் முன்னாள் மந்திரிகள் ஏக்நாத் கட்சே, வினோத் தாவ்டே, பங்கஜா முண்டே ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து பேசி உள்ளனர். இதன் மூலம் ஏக்நாத் கட்சே தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக பா.ஜனதாவில் அணி உருவாக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரபரப்பு குற்றச்சாட்டு
இந்தநிலையில் பங்கஜா முண்டே, வினோத் தாவ்டேவுடன் சந்திப்புக்கு பிறகு ஏக்நாத் கட்சே நிருபர்களிடம் கூறியதாவது:-
பங்கஜா முண்டேவுடன் பேசிய பிறகு, அவரது தோல்விக்கும், எனது மகள் ரோகிணியின் தோல்விக்கும் மாநில பா.ஜனதா தலைமையே காரணம் என்ற முடிவுக்கு வந்து உள்ளோம். எங்கள் தரப்பு கருத்துகளை கூற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். நான், பங்கஜா முண்டே, வினோத் தாவ்டே ஆகிய 3 பேரும் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளோம். மற்ற பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்களும் அவமதிக்கப்பட்டு இருப்பார்கள் என நினைக்கிறேன். மாநில பா.ஜனதா தலைமை வேண்டும் என்றே பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்களை புறக்கணிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏக்நாத் கட்சேயின் இந்த குற்றச்சாட்டு குறித்து பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறுகையில், ‘‘ஏக்நாத் கட்சே எதையும் வெளிப் படையாக பேசுபவர். அவருக்கு தோன்றியதை பேசி உள்ளார். அவர் பேசியதை கட்சி கவனத்தில் எடுத்து கொண்டு உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றாா்.
தலைவர்களுடன் சந்திப்பு
இதற்கிடையே ஏக்நாத் கட்சேவை அவரது வீட்டில் தங்கர் சமூக தலைவர் பிரகாஷ் சென்டே, மீனவர் சமூக தலைவர் ஜே.டி. தன்டெல், வன்ஜாரி சமூக தலைவர் அருண் கார்மதே, இஸ்லாமியர்கள் தலைவர் யுனுஸ் மனியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சோ்ந்த சுமார் 10 தலைவர்கள் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய பிரகாஷ் சென்டே, ‘‘பல அவமானங்களை சந்தித்த பிறகும், ஏக்நாத் கட்சே பா.ஜனதாவில் தொடருவது அவரது அரசியல் வாழ்க்கையின் தற்கொலையாக அமையும். எனவே அவர் வேறு கட்சியில் சேருவது குறித்து பரிசீலிக்க வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story