இலவச அரிசிக்கு பதிலாக பணம்; 10-ந் தேதி வங்கியில் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கந்தசாமி தகவல்


இலவச அரிசிக்கு பதிலாக பணம்; 10-ந் தேதி வங்கியில் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கந்தசாமி தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2019 5:40 AM IST (Updated: 7 Dec 2019 5:40 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் வழங்கப்படும் பணத்தை பயனாளிகள் அவரவர் வங்கி கணக்கில் இருந்து வருகிற 10-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

பாகூர்,

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் கேட்டு, அரசு கொறடா அனந்தராமனிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பொதுபணித்துறை சார்பில் தலா ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2 கிராமங்களில் அமைக்கப்பட்டது. அவற்றின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிழ்ச்சிக்கு அனந்தராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராமு, செயல் தலைவர் சண்முகம மற்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தொகுதி முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவின் போது அமைச்சர் கந்தசாமியிடம் அப்பகுதி மக்கள், "இலவச அரிசி மற்றும் ஆதிதிராவிடருக்காக வழங்கப்படும் இலவச துணிக்கான பணம் எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். மேலும் இனி வரும் காலங்களில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசியே போட வேண்டும் என கோரினர். இதற்கு அமைச்சர் கந்தசாமி, ``வருகிற 9-ந் தேதி (நாளை மறுநாள்) அரசு சார்பில் இலவச அரிசிக்கான பணம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மறுநாள் 10-ந் தேதியன்று வங்கியில் பணம் பெற்றுக்கொள்ளலாம்'' என தெரிவித்தார்.


Next Story