ஆட்டை கடித்துக்கொன்றதால் பரபரப்பு மணிமுத்தாறில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்
மணிமுத்தாறு ஊருக்குள் சிறுத்தை புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்துள்ளது. அங்கு இருந்த ஒரு ஆட்டை கடித்துக் கொன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
அம்பை,
மணிமுத்தாறு ஊருக்குள் சிறுத்தை புகுந்து மீண்டும் அட்டகாசம் செய்துள்ளது. அங்கு இருந்த ஒரு ஆட்டை கடித்துக் கொன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
மீண்டும் அட்டகாசம்
நெல்லை மாவட்டம் களக்காடு- முண்டந்துறை வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது மணிமுத்தாறு. இங்கு வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மணிமுத்தாறு அண்ணாநகர் குடியிருப்பை சேர்ந்த ராமர் என்பவருடைய வீட்டில் சிறுத்தை புகுந்து, 8 ஆடுகளை கடித்துக் கொன்றது.
இதையடுத்து வனத்துறை சார்பில் தானியங்கி கேமரா அமைத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். பின்னர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து, காட்டுக்குள் விட்டனர். இதனால் சிறுத்தை அட்டகாசம் சற்று ஓய்ந்திருந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலத்தில் சிறுத்தை புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மணிமுத்தாறு ஊருக்குள் சிறுத்தை புகுந்து மீண்டும் தனது அட்டகாசத்தை தொடங்கியது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஆட்டை கடித்துக்கொன்றது
ஏற்கனவே 8 ஆடுகளை சிறுத்தைக்கு பலி கொடுத்து அந்த சோகத்தில் இருந்து மீளாத நிலையில் இருந்து வந்த ராமர், அதன்பிறகு தான் வளர்த்து வரும் மற்றொரு ஆட்டையும் சிறுத்தை தூக்கிச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இரும்பு கூண்டு அமைத்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு ராமர் வழக்கம் போல், இரும்பு கூண்டில் ஆட்டை அடைத்துவிட்டு வீட்டுக்குள் தூங்க சென்றுவிட்டார். நேற்று காலை வெளியே வந்து பார்த்தபோது இரும்பு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஆடு, ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அம்பை வனச்சரகர் கார்த்திகேயன், வனவர் முருகேசன் மற்றும் வனவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் கால்நடை மருத்துவர் மனோகரன் வந்து பரிசோதனை செய்தார். இதில் சிறுத்தை, ஆட்டை கடித்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சிறுத்தை அட்டகாசம் மீண்டும் தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
Related Tags :
Next Story