நண்பரின் காதல் விவகாரம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை


நண்பரின் காதல் விவகாரம்: போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2019 11:15 PM GMT (Updated: 7 Dec 2019 7:06 PM GMT)

பனமரத்துப்பட்டி அருகே நண்பரின் காதல் விவகாரத்தால் போலீஸ் விசாரணைக்கு பயந்து என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 22), டிப்ளமோ என்ஜினீயர். அதேபோல் இதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற கிருபாகரன் (22). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் சீனிவாசன் சேலத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் 17 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணை

இதனிடையே சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர் சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சீனிவாசனின் நண்பரான சதீஷ்குமாரை நேற்று முன்தினம் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு மீண்டும் நேற்று காலை சதீஷ்குமாரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வர வேண்டும் எனக்கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் அடுத்த நாள் மீண்டும் போலீஸ் விசாரணைக்கு செல்ல வேண்டுமே என்ற பயத்தில், மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை சதீஷ்குமாரின் பெற்றோர் அரளிப்பூ எடுப்பதற்காக அதிகாலை நேரத்திலேயே தோட்டத்திற்கு சென்றுவிட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் 3 பக்க கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் சதீஷ்குமார் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம்

மேலும் சதீஷ்குமார் எழுதி வைத்திருந்த மூன்று பக்க கடிதத்தை ேபாலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:-

என் நண்பன், அந்த பெண்ணை அழைத்து சென்றதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீசார் என்னை அழைத்து சென்று விசாரணை நடத்தியது மிகவும் மன உளைச்சலாக இருந்தது. போலீசார் மீண்டும் என்னை விசாரணைக்கு வரச்சொன்னது மிகவும் கஷ்டமாக உள்ளது. போலீசார் என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதன் மூலம் என்னுடைய பெற்றோருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி விட்டேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய இந்த முடிவிற்கு என் நண்பர்கள் யாரும் காரணம் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இதனிடையே நேற்று காலை சதீஷ்குமாரின் உறவினர்கள் ஏராளமானவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடம் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் உடலை வாங்க மறுத்து திடீரென போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், போலீசார் துன்புறுத்தியதால் தான் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நண்பரின் காதல் விவகாரத்தால், என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story