கொடிநாள் நிதியாக ரூ.1.38 கோடி வசூலிக்க இலக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கொடிநாள் நிதியாக ரூ.1.38 கோடி வசூலிக்க இலக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2019 4:30 AM IST (Updated: 8 Dec 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக ரூ.1 கோடியே 38 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொடிநாள் நிதியாக ரூ.1 கோடியே 38 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

கொடிநாள் நிதி

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம், முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் வகையில் 2019-20-ம் ஆண்டிற்கான கொடி நாள் நன்கொடை நிதி வசூல் தொடக்க நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டு, கொடிநாள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

கல்வி உதவித்தொகை

முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர நிதியுதவி, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர் மற்றும் குடும்பத்தினருக்கான நிதியுதவி, திருமண நிதியுதவி, மருத்துவ செலவு உள்ளிட்ட பல்வேறு நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முன்னாள் படை வீரர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க கொடி நாள் நிதி வசூல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 2018-19-ம் ஆண்டில் தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.16 லட்சமும், மாவட்டத்தின் மற்ற பிற துறைகளுக்கு ரூ.98.94 லட்சமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மாநகராட்சியின் மூலம் ரூ.8.75 லட்சமும், மாவட்டத்தின் மற்ற பிற துறைகளின் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சத்து 8 ஆயிரமும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது இலக்கை விட 22 சதவீதம் அதிகமாகும்.

இலக்கு

இந்த ஆண்டு மாநகராட்சிக்கு ரூ.8 லட்சமும், மாவட்டத்தின் பிற அலுவலகங்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் அனைத்து துறைகளும் கடந்த ஆண்டை போல் இலக்கை விட கூடுதலாக நிதி வசூல் செய்து முன்னாள் படைவீரர் மற்றும் குடும்பத்தினருக்கு உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் நாகராஜ், நல அமைப்பாளர் ஜெரிபாய், கண்காணிப்பாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story