சேத்தியாத்தோப்பு அருகே, தூக்கில் இளம்பெண் பிணம் - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
சேத்தியாத்தோப்பு அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் கூறியுள்ளார்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வரங்கம் (வயது 27). இவருக்கும், அரியலூர் மாவட்டம் தென்னூரை சேர்ந்த வளர்மதி(23) என்பவருக்கும் 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வளர்மதி தூக்கி்ல் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வரங்கம், இது குறித்து வளர்மதியின் தந்தை கந்தவேலுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது அவர், உங்களது மகள் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
இதையறிந்ததும் வளர்மதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு பாளையங் கோட்டைக்கு வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இது குறித்து சோழத்தரம் போலீசில் கந்தவேல் புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
வளர்மதிக்கும், செல்வரங்கத்துக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே வளர்மதி, என்னிடம் கூறினார். தற்போது வளர்மதி தற்கொலை செய்து கொண்டதாக செல்வரங்கம் கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை. எனது மகள் சாவில் சந்தேகம் இருக்கிறது. எனவே இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரி்ல் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சோழத்தரம் போலீசார் விரைந்து சென்று, வளர்மதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து வளர்மதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்துக் கொன்று விட்டு உடலை தூக்கில் தொங்க விட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி திருமணமான 2 ஆண்டுக்குள் வளர்மதி இறந்துள்ளதால் இந்த வழக்கு சம்பந்தமாக சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜனும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story