நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விருப்பம் - திகார் சிறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பினார்
நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடும் பணிக்கு விருப்பம் தெரிவித்து திகார் சிறை டி.ஜி.பி.க்கு ராமநாதபுரம் போலீஸ் ஏட்டு கடிதம் அனுப்பி உள்ளார்.
ராமநாதபுரம்,
கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் தொடர்புடைய ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்கூர் ஆகியோரையும், 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். அந்த சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அவர்களுக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி திகார் சிறையில் ஆள் இல்லை என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அந்த பணிக்கு தயாராக உள்ளதாக ராமநாதபுரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன் (வயது 42) என்பவர் திகார் சிறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேரை தூக்கிலிட திகார் சிறையில் ஆள் இல்லை என்பதால் தண்டனை தள்ளிப்போவதாக செய்திகள் வருகின்றன. எனவே. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அந்த பணியை செய்ய விருப்பம் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் போலீஸ் ஏட்டு சுபாஷ் சீனிவாசன், அண்ணா பதக்கம் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story