மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபர் கைது - தந்தைக்கு வலைவீச்சு


மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபர் கைது - தந்தைக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Dec 2019 4:00 AM IST (Updated: 8 Dec 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி, 

ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதி அருகே உள்ள ராஜப்பன்கோட்டை என்ற கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கனிமவள துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கனிமவளத்துறை ஆய்வாளர் கண்ணன், ஆண்டிப்பட்டி போலீசார் உதவியுடன் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ராஜப்பன்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஓடையில் 2 பேர் டிப்பர் லாரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.

இதனை கண்ட போலீசார், மணல் அள்ளிய நபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர்கள் ராஜப்பன்கோட்டையை சேர்ந்த பால்பாண்டி (வயது 45), அவரது மகன் சிவக்குமார் (28) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட 2 பேரையும் வாகனத்தில் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் 2 பேரும் போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடினர். இதனால் சுதாரித்து கொண்ட போலீசார், தப்பியோடிய 2 பேரையும் விரட்டினர். அப்போது பால்பாண்டி மட்டும் தப்பியோடிவிட்டார். சிவக்குமாரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அவரது தந்தை பால்பாண்டியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story