மத்திய வழித்தடத்தில் இயக்க புதிய ஏ.சி. மின்சார ரெயில் மும்பை வந்தது
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இயக்குவதற்காக புதிய ஏ.சி. மின்சார ரெயில் மும்பை வந்தடைந்தது.
மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இயக்குவதற்காக புதிய ஏ.சி. மின்சார ரெயில் மும்பை வந்தடைந்தது.
மும்பை வந்த ஏ.சி. ரெயில்
மும்பையில் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் தாழ்வான பழமையான பாலங்களால் மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் (சி.எஸ்.எம்.டி. - கல்யாண்) ஏ.சி. மின்சார ரெயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இயக்குவதற்காக சென்னை ஐ.சி.எப்.யில் சுமார் ரூ.54 கோடி செலவில் தயாரான ஏ.சி. மின்சார ரெயில் மும்பை வந்தது. புதிய ஏ.சி. மின்சார ரெயில் தற்போது குர்லா ரெயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில்...
மும்பை வந்து உள்ள புதிய ஏ.சி. மின்சார ரெயிலில் 5 ஆயிரத்து 964 பயணிகள் பயணம் செய்ய முடியும். இதில் 1,028 பேர் உட்கார்ந்தபடி பயணம் செய்யலாம். இந்த ரெயிலை அதிகப்பட்சமாக 110 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். இந்த ரெயில் மத்திய ரெயில்வேயின் டிரான்ஸ் ஹார்பர் வழித்தடத்தில், வாஷி - தானே இடையே இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும் ஏ.சி. மின்சார ரெயிலை மெயின் வழித்தடத்தில் இயக்கவும் வாய்ப்பு இருப்பதாக மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘புதிய ஏ.சி. ரெயில் நீளம் குறைவானது தான். எனவே அதை மத்திய ரெயில்வேயின் எந்த வழித்தடத்திலும் இயக்க முடியும். இதேபோல அதன் உயரம் 4.27 மீட்டர் தான். எனவே புதிய ஏ.சி. ரெயிலை மெயின், துறைமுக வழித்தடத்திலும் இயக்க முடியும்’’ என்றார்.
புதிய ஏ.சி. மின்சார ரெயிலின் சோதனை ஓட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்தமாத தொடக்கத்தில் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related Tags :
Next Story