விழுப்புரத்தில் பயங்கரம்: ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் முதல் மனைவி எரித்துக்கொலை - போலீஸ் விசாரணை
விழுப்புரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரின் முதல் மனைவி எரித்துக்கொலை செய்யப்பட்டார். இது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விழுப்புரம்,
விழுப்புரம் சுதாகர் நகர் கரிகாலன் தெருவில் வசிப்பவர் நடராஜன் (வயது 60). இவர் திருக்கோவிலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா என்பவரை திருமணம் செய்தார். அவருக்கு குழந்தை இல்லாததால் சில ஆண்டுகள் கழித்து திருக்கோவிலூரை சேர்ந்த லீலா என்பவரை நடராஜன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வேலாயுதம் (23) என்ற மகன் உள்ளார்.
நடராஜனின் முதல் மனைவி இந்திரா (56) விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் அவர் வட்டிக்கும் பணம் கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் நடராஜன் தனது 2-வது மனைவி லீலாவை பார்ப்பதற்காக விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு சென்றுள்ளார்.
பின்னர் நேற்று காலை 11 மணியளவில் நடராஜன், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இந்திரா உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்திராவின் பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருந்தது. அவரை யாரோ மர்ம நபர்கள் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளனர். இந்திரா மயங்கி விழுந்ததும் அவர் மீது துணிகளை போட்டு தீ வைத்து எரித்துக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் தமிழ் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடி அதே தெருவிலேயே சுற்றி சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
பின்னர் இந்திராவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் தகராறில் யாரேனும் இந்திராவை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் முதல் மனைவியை தாக்கி எரித்துக்கொலை செய்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story