உத்தமபாளையம் அருகே பயங்கரம்: செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரி சரமாரி வெட்டிக் கொலை
உத்தமபாளையம் அருகே செல்போனில் பேசி செக்ஸ் தொல்லை கொடுத்த வியாபாரியை, தனது கணவருடன் சேர்ந்து இளம்பெண் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சின்னஓவுலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (வயது 30). இவரது மனைவி நிரஞ்சனா (23). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளது. பாண்டீஸ்வரனின் அக்காள் ராஜேசுவரி (33). அவரது கணவர் மணிகண்டன் (30). வாழை இலை வியாபாரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மணிகண்டன் குடும்பத்துடன் பக்கத்து கிராமமான ஒத்தபட்டியில் வசித்து வந்தார்.
மணிகண்டன், உறவினர் என்பதால் பாண்டீஸ்வரனின் மனைவி நிரஞ்சனாவை அடிக்கடி நேரில் வந்து பார்ப்பது, சில நேரங்களில் செல்போனில் பேசி வந்துள்ளார். இதற்கிடையே 2 பேரும் தனியாக அவ்வப்போது பேசிவந்ததை, அவர்களது உறவினர்கள் கண்டித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக பாண்டீஸ்வரனுக்கும், நிரஞ்சனாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் மணிகண்டன் வீட்டிலும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து மணிகண்டன் தனது குடும்பத்துடன், ஒத்தப்பட்டியில் இருந்து ராயப்பன்பட்டி லூர்துநகருக்கு குடியேறினார். இந்த நிலையில் மணிகண்டன் மீண்டும் நிரஞ்சனாவிடம் செல்போனில் பேசி தொந்தரவு செய்துள்ளார். மேலும் சம்பவத்தன்று பாண்டீஸ்வரன் வேலை தொடர்பாக வெளியூர் சென்றிருந்த வேளையில், அவரது வீட்டிற்கு சென்ற மணிகண்டன், நிரஞ்சனாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு தெரியாமல் டீயில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டு, அவருடன் ஆபாசம் மற்றும் அந்தரங்கம் தொடர்பாக பேசி அதனை மணிகண்டன் செல்போனில் பதிவு செய்துள்ளார். அந்த செல்போன் பதிவை, தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார்.
இதுதவிர நிரஞ்சனா குறித்து அவதூறாக பேசி வந்ததுடன், அடிக்கடி அவருக்கு மணிகண்டன் செல்போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் பரவ செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார். மேலும் செல்போன் மூலம் பேசி அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் பாண்டீஸ்வரனுக்கு தெரியவரவே அவர்களது குடும்பத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை மணிகண்டன் பேசியது தொடர்பாக பாண்டீஸ்வரனுக்கும், நிரஞ்சனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செல்போனில் பேசியது உண்மையா என்பதை மணிகண்டனிடம் நேரில் சென்று கேட்கலாம் என்று முடிவு செய்து கணவன்-மனைவி 2 பேரும் பெருமாள்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் இருக்கும் ராயப்பன்பட்டிக்கு சென்றனர். அங்கு சண்முகாநதி அணைக்கு செல்லும் சாலையில் மணிகண்டன், அவரது மனைவி ராஜேசுவரி வாழை இலை அறுப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பாண்டீஸ்வரன் மறித்து, செல்போனில் பேசியது குறித்து கேட்டார்.
அவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று நிரஞ்சனா மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதனை தடுக்க வந்த ராஜேசுவரிக்கும் வெட்டு விழுந்தது. அப்போது பாண்டீஸ்வரன், நிரஞ்சனாவிடம் இருந்த அரிவாளை பறித்து, அவரும் மணிகண்டனை வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் இறந்துபோனார்.
பின்னர் பாண்டீஸ்வரனும், நிரஞ்சனாவும் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு, ராயப்பன்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாயன் ஆகியோர் விரைந்து சென்று, மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயம் அடைந்த ராஜேசுவரியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ்வரன், நிரஞ்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story