உஷாரய்யா உஷாரு: குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்


உஷாரய்யா உஷாரு:  குடும்பத்து பெண்ணை வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்த பழைய கல்லூரித் தோழன்
x
தினத்தந்தி 8 Dec 2019 3:15 PM IST (Updated: 8 Dec 2019 3:15 PM IST)
t-max-icont-min-icon

அவளுக்கு 45 வயது. கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

ஒரே மகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள். வசதியான வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருக்கும் சூழலில், அன்று வீட்டு முன்பு வந்து நின்ற விலை உயர்ந்த காரில் இருந்து இறங்கிய பழைய கல்லூரித் தோழன் தனது குடும்ப வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவராக்கிவிடுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லைதான்.

அவன், அவளோடு கல்லூரியில் பயின்றவன். அப்போது குறிப்பிட்ட வகை விளையாட்டில் தனது அபார திறமையை நிரூபித்து பதக்கங்களும் பெற்றவன். அதனால் கல்லூரியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்தவன், இவளுக்கு காதல் வலை வீசினான். இவள் கண்டு கொள்ளவே இல்லை. கல்லூரி படிப்பு முடியும் வரை அவனிடமிருந்து விலகியே இருந்தாள்.

வருடங்கள் பல கடந்த நிலையில் அவனை முற்றிலுமாக இவள் மறந்துவிட்டாள். ஆனால் அவன் அந்த மாவட்டத்தில் பிரபலமான ஆளாக வலம் வந்துகொண்டிருப்பதையும், திரை உலக நட்சத்திரங்களை அடிக்கடி அங்கே அழைத்துவந்து நிகழ்ச்சிகள் நடத்தி, அவர்களுடன் நிற்கும் போட்டோக்களை வெளியிட்டு தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொண்டிருப்பதையும் இவளோடு படித்த தோழிகள் சிலர் இவளுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ‘போஸ்ட்’ செய்துகொண்டிருந்தார்கள். அவற்றில் எதையும் இவள் கவனத்தில்கொள்ளவில்லை.

25 வருடங்கள் கடந்த நிலையில் அவன் வீடு தேடிவந்து கம்பீரமாக காரில் இருந்து இறங்கியதும், அவள் அடையாளங்கண்டு வரவேற்றாள். அன்று அவளது கணவர் வீட்டில் இல்லை. மகளும் கல்லூரிக்கு சென்றுவிட்டாள். காபி கொடுத்து உபசரித்தாள். அவளது கணவர், குடும்பம், மகள் பற்றிய அனைத்து விஷயங் களையும் கேட்டறிந்துவிட்டு, ‘ரொம்ப காலத்திற்கு பின்பு உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. நீ என்னிடம் அதிக பாசம்காட்டுகிறாய். இந்த பகுதியில் உள்ள எல்லா அரசு அலுவலகங்களிலும் எனக்கு செல்வாக்கு உண்டு. உன் மகள் படிக்கும் கல்லூரி உரிமையாளரும் எனது நண்பர்தான். எங்கு என்ன வேலை நடக்கவேண்டும் என்றாலும் என்னிடம் சொல். ஒரு போனிலே நான் முடித்துக்கொடுத்துவிடுவேன்’ என்று கூறிவிட்டு, அவளது செல்போன் நம்பரையும் வாங்கிவிட்டு சென்றான்.

அன்றிலிருந்து அவன் தினமும் போன் செய்யத் தொடங்கினான். அவளது கணவர் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து மணிக்கணக்கில் பேசினான். அழகில் இருந்து அனைத்து விஷயங்களிலும் அவளை புகழ்ந்தான். அவர்கள் வசிக்கும் அந்த கார்ப்பரேஷன் முதல் அவளது மகள் படிக்கும் கல்லூரி வரை தனது செல்வாக்கை பயன்படுத்தி சின்னச்சின்ன வேலைகளை செய்துகொடுத்தான். அப்படியே அவளது அந்தரங்க வாழ்க்கைக்குள்ளும் பிரவேசித்துவிட்டான்.

அன்று அருகில் உள்ள பெருநகரத்தில் திரை உலக பிரபலங்கள் பங்கேற்ற கலைவிழா ஒன்று நடந்தது. மகள், கல்லூரிக்கு ‘கட்’ அடித்துவிட்டு தனது தோழிகளோடு அந்த நிகழ்ச்சியை பார்க்க சென்றாள். உள்ளே சென்றவளுக்கு அதிர்ச்சி. அங்கே அந்த நபரோடு தனது தாயார் உட்கார்ந்திருந்ததை பார்த்தாள். முதல் வரிசையில் அவளுடன் மிக நெருக்கமாக அமர்ந்திருந்த அவன், முக்கியமான நபர்களுக்கு அவளை அறிமுகம் செய்துவைக்கவும் செய்தான். இடைவேளையின்போது அவர்கள் இருவரும் ஓய்வறைக்கும் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்துவந்தார்கள்.

மகளான அவளால் அதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதிர்ச்சியோடு மீண்டும் கல்லூரிக்கே போய்விட்டாள். மாலையில் அவள் கல்லூரி முடிந்து வீடு திரும்பியபோது தாயார் வீட்டில் இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு சென்றது பற்றியோ அந்த நபரோடு அமர்ந்திருந்திருந்தது பற்றியோ எதுவும் சொல்லவில்லை. இரவில் கணவர் திரும்பி வந்தார். அவரிடமும் அந்த நிகழ்ச்சி பற்றி எதுவும் பேசவில்லை. அதனால் தாயாரின் நடத்தை மீது அவளுக்கு சந்தேகம் வந்தது.

தாயாரின் செல்போனை ரகசியமாக துழாவினாள். அப்போது அவளுக்கு கூடுதல் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நபருடன் தினமும் மணிக் கணக்கில் பேசியது, புகைப்படங்களில் இருப்பது போன்றவை அவளை கலக்கத்திற்குள்ளாக்கியது. காலையில் கணவரும், மகளும் வெளியே சென்றுவிட்ட பின்பு மாலை வரை தனிமையில் இருந்த அவளை தனது வசீகர பேச்சாலும், செயலாலும் கவர்ந்து அந்த நபர் தனது பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தியிருக்கிறான்.

நிலைமை எல்லைமீறி போய்விட்டது என்பதை மகள் உணர்ந்தாள். ‘ஆவேசப்பட்டால் நமக்குதான் அவமானம். நிதானமாக கையாண்டு அம்மாவை மீட்போம்’ என்று அப்பாவிடம் எடுத்துக்கூறினாள். பின்பு இருவரும் சேர்ந்து களத்தில் இறங்கினர்.

அந்த நபரை சந்தித்து இருவரும் பேசியபோது, ‘உங்க அம்மா மாதிரி எனக்கு மூணு நாலு ‘பிரண்ட்ஸ்’ இருக்காங்க. எல்லோரும் என்னோடு முன்பு காலேஜில் படிச்சவங்கதான். நான் யாரையும் எப்போதும் தேடிப்போறது கிடையாது. அவங்க தேவைக்குதான் என்னை தேடி வர்றாங்க... நீங்க சொல்லவிரும்புவதை எல்லாம் உங்க அம்மாகிட்டே போய் சொல்லி அவங்களை தடுத்து நிறுத்துங்க..’ என்று தெனாவட்டாக கூறியிருக்கிறான்.

நிலைமை மேலும் மோசமாகிவிடக்கூடாது என்பதற்காக அந்த குடும்பத்தினர் வேறு ஊருக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள். அவளிடம் மனமாற்றத்தை உருவாக்கி, அந்த நபரை மறக்கவைக்க மனோதத்துவ ‘கவுன்சலிங்’குக்கு அழைத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள்.

- உஷாரு வரும்.

Next Story