தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது: மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
தேர்தலை சந்திக்க தி.மு.க. பயப்படுகிறது என்றும், மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார் என்றும் கோவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தார். பின்னர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் படிதான் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தி.மு.க.தான் நீதிமன்றம் சென்றது. அதனால் உள்ளாட்சி தேர்தல் தடைப்பட்டது.
அப்போது வார்டு வரையறை சரியில்லை இட ஒதுக்கீடு சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்று தி.மு.க. கூறியது. கடந்த மே மாதம் வார்டு வரையறை செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுகின்றது. அதில் ஏதாவது ஆட்சேபனை இருந்திருந்தால் கருத்து தெரிவித்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் தமிழகம் ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த ஏழு மண்டலங்களிலும் ஆட்சேபனை மனுக்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 19 ஆயிரம் மனுக்கள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரிடமும் இருந்து பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் பரிசீலனை செய்து முறையாக இட ஒதுக்கீடு அடிப்படையில், வார்டு வரையறை செய்யப்பட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் செல்ல உள்ள தாக தி.மு.க. தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த வார்டில் மறு வரையறை செய்யப்பட்டதில் பிரச்சினை உள்ளது. ஆட்சேபனை இருக்கின்றது அல்லது ஏதாவது வார்டில் இட ஒதுக்கீட்டில் பிரச்சினை உள்ளதா என்பதை தெளிவு படுத்தாமல் பொத்தாம் பொதுவாக இந்த தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்பதுதான் மு.க.ஸ்டாலின் நோக்கமாக உள்ளது.
மு.க.ஸ்டாலின் ஒவ்வொருமுறை பேசும்போதும் அ.தி.மு.க. அரசு தேர்தலை வேண்டும் என்று தள்ளிப் போட்டு கொண்டு செல்கின்றது, காலம் தாழ்த்துகிறது. இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போகின்றது. ஏனென்றால் உள்ளாட்சி தேர்தல்தான் அடிப்படை வசதிகள் செய்கின்ற அமைப்பு அந்த அமைப்பிற்கு உடனடியாக அ.தி.மு.க. அரசு தேர்தலை நடத்த வில்லை என்று குற்றச்சாட்டை தமிழகம் முழுவதும் தெரிவித்து வந்தார்.
நீதிமன்றமே தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்து 27 மாவட்டங்களிலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், மீதமுள்ள 9 மாவட்டங்களில் முறையாக வார்டு மறுவரையறை செய்து 4 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அதன் அடிப்படையில்தான் தமிழக தேர்தல் ஆணையம் இப்போது தேர்தலை அறிவித்து உள்ளது.
ஆனால் மு.க.ஸ்டாலின் 2016-ல் எப்படி தேர்தலை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தை நாடி தேர்தலை தள்ளி போட முயற்சி செய்து அதன் விளைவாக 3 ஆண்டுகள் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல இப்பொழுதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி இந்த தேர்தலை எப்படியாவது தள்ளிப்போட வேண்டும் என்று முயற்சிக்கின்றார்.
சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டு விட்டு தற்போது மீண்டும் நீதிமன்றம் செல்வது வேடிக்கையாக உள்ளது. அவருடைய திட்டம் எல்லாம் எப்படியாவது தேர்தலை தள்ளி போட வேண்டும் என்பதுதான். தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மு.க.ஸ்டாலின் நிருபர்களை சந்திக்கின்ற போது தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு தைரியம் இருக்கிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்புவதே வேலையாக இருந்தது. நாங்கள் இன்றைக்கு கேள்விகளை எழுப்புகின்றோம். சுப்ரீம் கோர்ட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஏன் பயப்படுகிறீர்கள். மக்கள் வாக்களித்து தான் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆகவே இன்று மக்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் பயப்படு கிறார்.
கோவையை எடுத்துக்கொள்ளுங்கள் எவ்வளவு வளர்ச்சி பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. எத்தனை சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. எத்தனை திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் நாங்கள்தான் கொண்டு வந்தோம். ஆகவே மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முறையாக அ.தி.மு.க. அரசு கொண்டுவருகின்றது.
வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய்யான செய்தியை மக்களிடம் பரப்பி, மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கின்றார். அ.தி.மு.க. அரசு இருக்கும் வரை அது ஒருபோதும் நடக்காது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே வெங்காய விலை உயர்வு பிரச்சினை உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போது மழைக் காலமாக உள்ளது. இதன் காரணத்தினால் வெளிமாநிலத்தில் இருந்து வெங்காயம் அதிகமாக வர வேண்டிய சூழல் நிலவுகிறது. மழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெங்காய விலை உயர்வாக உள்ளது. அடுத்த 15 அல்லது 20 நாட்களுக்குள் இந்த நிலை மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story