தினமும் 1 அங்குலம் வீதம், சோலூர்மட்டம்- கரிக்கையூர் சாலை பூமிக்குள் இறங்குவதால் பரபரப்பு
சோலூர்மட்டம்- கரிக்கையூர் சாலை தினமும் 1 அங்குலம் வீதம் பூமிக்குள் இறங்குவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டு உள்ளார்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சோலூர்மட்டத்தில் இருந்து கரிக்கையூர் ஆதிவாசி கிராமத்திற்கு செல்லும் சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டது. மேலும் மெட்டுக்கல் என்னும் இடத்தில் சுமார் 3 அடி அளவிற்கு சாலை பூமிக்குள் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் இந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தேயிலை தோட்டங்கள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் பூமிக்குள் இறங்கி இருப்பதும், அங்கிருந்த மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்திருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நில அதிர்வால் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோத்தகிரிக்கு பேரிடர் மீட்பு பணிக்காக வந்திருந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
சோலூர்மட்டம்- கரிக்கையூர் சாலையை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் எம்.எல்.ஏ. சாந்திராமு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கெட்சி லீமா அம்மாலினி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், தாசில்தார் மோகனா மற்றும் சேலத்தை சேர்ந்த புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முதற்கட்ட ஆய்வில் பூமிக்கு அடியில் நீரோட்டம் செல்வதால், நீரோட்டத்தின் திசையில் உள்ள இடங்களில் மட்டும் சாலைகள் பூமிக்குள் இறங்கி இருப்பது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து, மாவட்ட மண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மணிவண்ணன் மற்றும் புவியியல் துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சோலூர்மட்டம்- கரிக்கையூர் சாலை பூமிக்குள் இறங்குவதற்கான காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
கரிக்கையூர் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பும், 2009 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் பூமிக்குள் சாலை இறங்கி இருப்பதாக அப்பகுதி ஆதிவாசி மக்கள் தெரிவித்தனர். தற்போது சாலை துண்டிப்பு ஏற்பட்ட இடத்திற்கு சுமார் 50 மீட்டர் தொலைவில் கடந்த முறை குறுகிய வளைவுடன் கூடிய சாலை பூமிக்குள் இறங்கி சேதமடைந்தது. இதனை தொடர்ந்து ரூ.50 லட்சம் செலவில் அந்த சாலை வலுவான தடுப்புசுவருடன் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோலூர்மட்டம்- கரிக்கையூர் சாலை தினமும் 1 அங்குலம் வீதம் கீழே இறங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தால் அச்சமடைந்துள்ள அவர்கள் சாலை கீழே இறங்குவதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விரைவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். சோலூர்மட்டத்தில் இருந்து கரிக்கையூர் செல்லும் சாலை தற்போது சேதமடைந்து உள்ளதால் அரசு பஸ் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கரிக்கையூர், மெட்டுக்கல், பாவியூர், அத்தியூர்மட்டம், பங்களாப்பாடிகை, வக்கனாமரம், சாமகூடல், கோழிக்குட்டை, கொப்பையூர், கோத்திமுக்கு, கம்பையூர் ஆகிய 11 ஆதிவாசி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது கிராமங்களுக்கு வனவிலங்குகள் தாக்குதலுக்கு அஞ்சியவாறு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி இந்த கிராமங்களுக்கு கோத்திமுக்கு கிராமம் வழியாக செல்லும் மாற்றுப்பாதை நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாததால், அங்கு வளர்ந்துள்ள புதர்களை வெட்டி அகற்றி அந்த வழியாக அரசு பஸ் சேவையை நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தொடங்கினர். இதனால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story